கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; ஒடிசாவில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்: எதிர்க்கட்சிகள் ரயில் மறியல், பேரணி; டயர்கள் எரிப்பால் பதற்றம்
புவனேஸ்வர்: ஒடிசாவில் உதவி பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தீக்குளித்த மாணவி உயிரிழந்த நிலையில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. சில இடங்களில் மாணவர் சங்கத்தினர் டயர்களை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பகிர் மோகன் தன்னாட்சி கல்லூரியில், ஒருங்கிணைந்த இளநிலை கல்வியியல் (பி.எட்) ஒரு மாணவி 2ம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு அந்த கல்லூரியின் கல்வி துறை தலைவரான உதவி பேராசிரியர் சமீரா குமார் சாஹு, பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவி, கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்தார். 3 நாள்கள் உயிருக்கு போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி இரவு உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாணவியின் தந்தையுடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “இது தற்கொலை அல்ல, பாஜ அமைப்பின் திட்டமிட்ட கொலை” என்று கடுமையாக சாடியுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது, பாதிக்கப்பட்ட மாணவியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி பேராசிரியர் சமீரா குமார் சாஹு, கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவியின் குடும்பத்தினரை ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதே நேரத்தில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார். மாணவியின் தற்கொலை சம்பவம் ஒடிசா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது, மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்த தீவிர விவாதங்களையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜ அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தலைமையில் 8 எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் முழு கடையடைப்பு மற்றும் பேரணி, ரயில் மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருந்து கடைகள் மற்றும் பால் கடைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு பந்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
சில இடங்களில் மாணவர் சங்கத்தினர், தெருக்களில் டயர்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் கூறுகையில், ‘அனைத்து மாவட்டங்களிலும் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது. பொதுமக்களும் போராட்டத்துக்கு ஆதரவளித்து, மாணவியின் தற்கொலைக்கு நீதி கோருகின்றனர்’ என்றார். முன்னதாக, நேற்று எதிர்க்கட்சியான பிஜு ஜனதாதள தொண்டர்கள், ஒடிசா பேரவை வளாகத்துக்கு வெளியே மிக பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீர் பீய்ச்சியும் கலைக்க முயன்றனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.