Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரூர் - சிறுவாணி மெயின் ரோட்டில் பழமையான ஆலமரம் அகற்றும் பணி துவக்கம்

தொண்டாமுத்தூர்: கோவை அருகே பேரூர் சொட்டையாண்டி குளக்கரையில் 75 ஆண்டுக்கு மேலாக பழமையான ஆலமரம் உள்ளது. கடந்த சில வருடங்களாக சிறுவாணி மெயின் ரோட்டில் பேரூர் முதல் பச்சாபாளையம் ஆவின் பால் பண்ணை, கோவை கொண்டாட்டம்,பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் ஈசா யோகா மையம், கோவை குற்றாலம், காருண்யா பெதஸ்தா மண்டபம் போன்ற சுற்றுலாத்தளங்கள் மற்றும் ஏராளமான கல்லூரி பஸ்கள், தினந்தோறும் நூற்றுக்கணக்கான கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருவதால் ஆலமரம் இருக்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. பழமையான ஆலமரத்தை அகற்றுவதற்கு சாலை பாதுகாப்பு குழு கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியது.மாவட்ட வருவாய் அலுவலர் பண்டரிநாதன் பரிந்துரை தொடர்ந்து, கோவை கலெக்டர் கிராந்தி குமார் ஆலமரத்தை அகற்ற உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பேரூர் போலீசார் பாதுகாப்பில், மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டனர்.

பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மரத்தை நவீன இயந்திரம் மூலம் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். இன்று மாலைக்குள் மரம் முழுமையாக வெட்டி அகற்றப்படும் எனக் கூறினர்.இதுகுறித்து பேரூர் பேரூராட்சி தலைவர் ப. அண்ணாதுரை கூறுகையில், சொட்டையாண்டி குளக்கரையில் நீண்ட காலமாக இடையூறாக இருந்த ஆலமரம் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த இடத்தில் பேரூருக்கு வரும் டவுன் பஸ்கள் நிறுத்துவதற்கு கலெக்டரிடம் கோரிக்கை விடப்படும். இதனால் இரண்டாம் நம்பர் திருப்பத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும் ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்படும் என்றார். பறவைகள் தவிப்பு: ஆலமரத்தை இயந்திர அறுவை கருவி மூலம் அகற்றினர். நேற்று மாலை 6 மணிக்கு ஏராளமான காகங்கள், மைனாக்கள் மற்றும் பறவைகள் எதிரில் உள்ள கட்டிடத்தின் மீது அமர்ந்து, தங்களது கூடுகளை காணாமல் திகைத்து,வெட்டப்பட்ட மரத்தை பார்த்தபடி குரல் எழுப்பியது பரிதாபமாக இருந்தது.