கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் எச்பி, டெல், ஏசர் நிறுவனங்கள் தேர்வு: முதற்கட்டமாக 10 லட்சம் கொள்முதல்; தொழில்நுட்ப அம்சங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி செய்தார்
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்ய எச்பி, டெல், ஏசர் நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மடிக்கணினி மாதிரியில் தொழில்நுட்ப அம்சங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி செய்தார். கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஏசர், டெல், எச்பி நிறுவனங்கள் பங்கேற்று ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்துள்ளன.
தற்போது லேப்டாப் வழங்கும் பணி அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கு மூன்று நிறுவனங்களுக்கு எல்காட் நிறுவனம் பணி ஆணை வழங்கியுள்ளது. எச்பி, டெல், ஏசர் ஆகிய மூன்று நிறுவனங்கள் மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசுக்கு சப்ளை செய்ய உள்ளன. மடிக்கணினி மாதிரி மற்றும் அதில் இடம்பெறும் தொழில்நுட்ப அம்சங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி செய்தார்.
மூன்று நிறுவனங்களிடமிருந்து நேரடியாக தமிழ்நாடு அரசு இந்த மடிக்கணினிகளை கொள்முதல் செய்கிறது. மார்ச் மாத இறுதிக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யும் பணியினை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மடிக்கணினிகளை மாணவர்களுக்கு விநியோகம் செய்வது மற்றும் அந்தத் திட்டத்தை எப்போது தொடங்குவது என்பது தொடர்பாக அடுத்த வாரம் துணை முதல்வர் தலைமையிலான குழு கூடி முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


