சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் தனது சக மாணவிகளுடன் நேற்று முன்தினம் ஸ்பென்சர் பிளாசா பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாநகர பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாணவியின் அருகே ஒரு நபர் அடிக்கடி இடித்து கொண்டு இடையூறு செய்துள்ளார். அப்போது கல்லூரி மாணவி, அந்த நபரை சற்று தள்ளி நில்லுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் ஆபாசமாக பேசி மாணவியை கையால் தாக்கியுள்ளார். அதை தடுக்க சென்ற சக மாணவிகளை கையை பிடித்து இழுத்து ஆடையை சேதப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டார்.
இதனால் மாணவிகள் சத்தம் போட்டனர். உடனே பேருந்தை ஓட்டுனர் அண்ணா மேம்பாலத்தில் நிறுத்தினார். பிறகு அந்த நபரை பயணிகள் படித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, தி.நகர் துக்காரம் உப்பரபாளையம் பகுதியை சேர்ந்த சையது அப்துல் ரஹ்மான் (40) என தெரியவந்தது. அதைதொடர்ந்து சையது அப்துல் ரஹ்மான் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.