Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெறும் மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவ- மாணவியருடன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து கலெக்டர் இளம்பகவத், கலந்துரையாடினார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று 2024-25ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவ- மாணவியருடன் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கலந்துரையாடினார். தொழிற்கல்விப் படிப்புகள், கல்லூரிகள் தேர்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

கலெக்டர் இளம்பகவத் பேசுகையில், உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென்று என்ற நோக்கில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘பெரிதினும் பெரிது கேள்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 206 பள்ளிகளில் இருந்து 2024-25ம் கல்வியாண்டில் பிளஸ்2 தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவர்களும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு உயர்கல்வியில் சரியான பாடப்பிரிவில் சேருவதை உறுதி செய்வது, அவர்கள் அனைவருக்கும் என்னென்ன விதமான படிப்புகள் உள்ளது, எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் எந்தெந்த மாதிரியான படிப்புகளில் சேர முடியும்.

அதற்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் விண்ணப்பிக்கலாம் போன்ற விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் ஆகியோருக்கு தெரிவித்து அதனை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர்.

மாவட்டத்தில் உள்ள 57 அரசுப் பள்ளிகளில் 150க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் தொழிற்கல்விப் படிப்புகள் படிப்பதற்கு தகுதியானவர்களாக உள்ளனர்.

அவர்களை எல்லாம் அழைத்து தொழிற்கல்விப் படிப்புகள், கல்லூரிகள் தேர்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்த உரிய வழிகாட்டுதல்கள் இன்று வழங்கப்பட்டு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் தொழிற்கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவர்களுடைய பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கு ஆகக்கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. எனவே மாணவர்கள் அரசு வழங்கக்கூடிய சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.

மேலும் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு தொழிற்கல்விப் படிப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு கல்லூரிகளைத் தேர்வு செய்வது, தேர்வு செய்யக்கூடிய பாடப்பிரிவுகள், அந்தந்த துறைகளில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாணவ, மாணவியருக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ - மாணவியர் கலந்து கொண்டனர்.