Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் சாதி வெறியில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள்

கோவை: சாதி வெறியில் வாலிபர் கொலை வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை ரத்தினபுரி சின்னராஜூ வீதியை சேர்ந்தவர் தாமரை செல்வன் (27). சிவில் இன்ஜினியர். தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் தம்பி பிரசாந்துடன் (23) தங்கி தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 2016 ஏப்ரல் 3ம் தேதி பிரசாந்த் நண்பர்களுடன் ரத்தினபுரி பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கே விளையாடிய சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் பிரசாந்த் தில்லை நகர் பகுதியில் தனது நண்பருடன் சென்றார். அப்போது அங்கே வந்த 2 பேர் அவரை தாக்கி தலையால் முட்டியுள்ளனர். மேலும் சாதியை குறிப்பிட்டு தகாத முறையில் பேசியுள்ளனர். இது குறித்து தாமரை செல்வன் அங்கே சென்று தம்பியை அடித்தவர்களை எச்சரித்ததாக தெரிகிறது. அன்று இரவு மாரியம்மன் கோயில் விழா தொடர்பாக தாமரை செல்வன் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கே சிலர் வந்து, மார்பு, வயிறு, தலை என பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் தாக்கியும் தாமரை செல்வனை கொலை செய்தனர்.

சாதி வெறியில் நடந்த இந்த கொடூர கொலை தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிந்து விக்கி என்கி விக்னேஷ் (23), டிப்ஸ் கார்த்திக் (26), காந்திபார்க் மகேந்திரன் (25), சித்தாபுதூர் கவாஸ்கான் (24), சுரேஷ் (25), ஜெய்சிங் (26), பிரகாசம் (27), நவீன்குமார் (24)கருப்பு கவுதம் (24), விமல்குமார் (25), விஜய் (19), சைமன் கிறிஸ்டோபர் (24), ஒன்றரை கவுதம் (25), கலையரசன் (26) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தபோது ஜெய்சிங் இறந்துவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் குற்றம் சாட்டப்பட்ட சைமன் கிறிஸ்டோபர், கருப்பு கவுதம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும், விஜய்யை விடுதலை செய்தும் மற்ற 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன் இருந்தார். அவர் தற்போது சென்னையில் உளவுத்துறை சிறப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக உள்ளார்.