கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 29 ஆண்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி கர்நாடகாவில் கைது: தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி
கோவை: கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியான டெய்லர் ராஜா, கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி ஆர்.எஸ்.புரத்தில் பா.ஜ.,வின் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு அப்போதைய தேசிய தலைவர் அத்வானி கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. அந்த சமயத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு அருகே 100 மீட்டர் தூரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. அத்வானி வர வேண்டிய விமானம் தாமதமானதால் அவர் உயிர் தப்பினார்.
அதன்பின், கோவையில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில், 58 பேர் உயிரிழந்தனர். மேலும், 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் 188 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். முதல் குற்றவாளியான அல் உம்மா இயக்க தலைவரான பாஷா, 25 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில், உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்த அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீனில் வந்த நிலையில், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடன் சேர்ந்து குண்டு வெடிப்பு வழக்கில் 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த சாதிக் என்கிற டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான், அயூப் ஆகிய 3 பேரை 29 ஆண்டுகளாக சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். இதில் 29 ஆண்டுக்கு பின் டெய்லர் ராஜாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்துள்ளனர். இவருக்கு டெயிலர் ராஜா, வளர்ந்த ராஜா, ஷாஜஹான், அப்துல் மஜீத், மகாண்டார், ஷாஜஹான் ஷைக் என பல பெயர்கள் உள்ளன.கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த அவரை கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து, சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் கோவை ஜே.எம் 5 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 2019ல் தலைமறைவான குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தீவிரவாதத் தடுப்பு பிரிவினர் கோவை மாநகர போலீசாருடன் இணைந்து இந்தியாவில் மிகவும் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான அபூபக்கர் சித்திக் மற்றும் மொகமது அலி (எ) யூனுஸ் ஆகியோரை ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
* முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023ல் தீவிரவாத எதிர்ப்பு பணிகளில் தனி கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக நுண்ணறிவு பிரிவின்கீழ், தீவிரவாத தடுப்பு பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடு காவல்துறை, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநில காவல் துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கிய தீவிரவாதிகளை, அண்மையில் நமது தீவிரவாத தடுப்பு பிரிவினர் சிறப்பாக செயல்பட்டு, கைது செய்துள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்த கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய, கர்நாடக மற்றும் ஆந்திரா மாநில காவல் துறையினருக்கும் எமது நன்றிகள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
* ஜெயிலரை கொன்றவர், வெடிகுண்டு தயாரிப்பதில் வல்லவர்: யார் இந்த டெய்லர் ராஜா?
கோவை குண்டுவெடிப்பு வழக்கில், டெய்லர் ராஜா முக்கிய குற்றவாளி ஆவார். ஆரம்பத்தில், கோவை தெற்கு உக்கடத்தில் உள்ள பிலால் காலனியில் வசித்து வந்த இவர், டெய்லர் தொழில் செய்ய குனியமுத்தூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தார். கோவை, ஒப்பணக்கார வீதியை சேர்ந்த பி.முஜிபுர் ரகுமான் உதவியுடன் அல்-உம்மா இயக்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். டெய்லர் ராஜா, குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தையல் மற்றும் எம்பிராய்டரி செய்து வந்தார். கோவையில் கடந்த 1997ம் ஆண்டு இறுதியில் போலீஸ்காரர் செல்வராஜ் கொலையை தொடர்ந்து, இஸ்லாமிய இளைஞர்கள் 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே 1998ல் அல்-உம்மா இயக்கத்தினர் குண்டுவெடிப்பு நிகழச் செய்தனர். வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக கேரளாவில் இருந்து, மதானி மேற்பார்வையில் அப்துல்ஒசீர் என்பவர் கோவைக்கு அழைத்து வரப்பட்டார். இவர், ஜெலட்டின் குச்சி மற்றும் டெட்டனேட்டர் உள்ளிட்ட உதிரிபாகங்களை பயன்படுத்தி, கைகளினால், பாதுகாப்பாக வெடிகுண்டுகளை தயாரிப்பதில் வல்லவர். இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் 12 பேர். அவர்களில் ஒருவர்தான் இந்த டெய்லர் ராஜா. இவரும், வெடிகுண்டு தயாரிப்பில் கைதேர்ந்த நபராக உயர்ந்தார். அல்-உம்மா இயக்கத்தில் உள்ள முக்கிய 15 பேர்களில், இவரும் ஒருவராக திகழ்ந்தார்.
டெய்லர் ராஜா, கோவையை விட்டு வெளியேறும்போது அவருக்கு வயது 20. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 1998ம் ஆண்டு ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு வருவதை அறிந்த டெய்லர் ராஜா, கோவையை விட்டு வெளியேறி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, அவ்வப்போது கோவைக்கு வந்து சென்றதாக கூறப்படுகின்றது. இவர், செல்போன் பயன்படுத்தியது கிடையாது. அதனால், இவரை பிடிக்க தனிப்படை போலீசார் திணறினர். எவ்வித தொழில்நுட்ப உதவியும் இல்லாமல், இவரது நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இவரை போலீசார் பிடித்துள்ளனர். கடந்த 1996ல் நாகூரில் நடந்த ஒரு கொலை வழக்கிலும், 1996-97ம் ஆண்டு கோவை மாநகரில் உள்ள ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திலும், மதுரை கரிமேடு காவல் நிலையத்திலும் இரண்டு கொலை வழக்குகளையும் எதிர்கொண்டார்.
கடந்த 1997ல் டெய்லர் ராஜா, அல்-உம்மாவின் கூட்டாளிகளுடன், கோவை நகரிலிருந்து பைக்கில் மதுரைக்கு சென்று, மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் என்பவரை கொலை செய்துள்ளார். 1998ல் கோவை மாநகரில் வி.எச்.ரோடு வள்ளல் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, வெடிகுண்டுகள் தயாரித்து, பதுக்கி வைத்திருந்தார். 1998 பிப்ரவரி 12, 13 மற்றும் 14ம் தேதிகளில் அல்-உம்மாவின் சில முக்கிய தலைவர்களுடன் சேர்ந்து நகரின் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டுகளை விநியோகம் செய்துள்ளார். யார்?, யார்? எந்தெந்த பகுதிகளில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்துள்ளார். மேற்கண்ட தகவல் அனைத்தும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
* கர்நாடகாவில் காய்கறி வியாபாரம்
கோவையை சேர்ந்த டெய்லர் ராஜா 20 வயதில் கோவை வெடிகுண்டு வழக்கில் தலைமறைவானார். அதன்பின், 29 ஆண்டுகள் கழித்து 48 வயதில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குண்டு வெடிப்பு வழக்கை தவிர 4 கொலை வழக்குகளும் உள்ளன. கர்நாடகாவில் பதுங்கி இருந்த டெய்லர் ராஜா தனது பெயரை மாற்றி காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இது மட்டுமின்றி கர்நாடகாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவர் தலைமறைவு குற்றவாளி என்பது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அங்கு வசித்து வந்துள்ளார்.