ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, செங்கரை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் சென்னை மற்றும் ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை, தண்டலம், பெரம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி.சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. புகாரின்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி மற்றும் எஸ்.ஐ. பிரசன்ன வரதன், தனிப்படையை சேர்ந்த எஸ்ஐக்கள் ராவ்பகதூர், செல்வராஜ் மற்றும் போலீசார் செங்கரை கிராமத்திற்குச் சென்றனர்.
அப்போது, அங்கிருந்த வாலிபர்கள் சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் வாலிபர்கள் தாங்கள் எடுத்து வந்த பைக்கை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். பின்னர், போலீசார் சேவல் சண்டை நடந்த இடத்தில் இருந்த 8 பைக்குகளை கைப்பற்றி ஊத்துக்கோட்டை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். சேவல் சண்டை நடத்தி தப்பியோடிய 8 பேரை ஊத்துக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.


