Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை திமுகவின் அறுதி பெரும்பான்மை வெற்றியை அமித்ஷா பார்ப்பார்: வைகோ திட்டவட்டம்

திருச்சி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இந்துத்துவ சக்திகளால் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. சனாதன சக்திகள் தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய நினைக்கிறது. அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டை காக்க திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். கொள்கை அடிப்படையில்தான் திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறோம். பாஜ கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தோம்.

பாஜ அரசு பொறுப்பேற்ற போது அந்த பதவி ஏற்பு விழாவிற்கு ராஜபக்சேவை அழைத்து இருந்தார்கள். தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை அழைக்கக்கூடாது என நான் பிரதமர் மோடியிடம் கூறினேன். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை உடனடியாக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி ராஜபக்‌சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்ட போது அந்த கூட்டணியிலிருந்து வெளியேறினோம். அதே நிலைப்பாடுதான் தற்பொழுதும்.

திமுக கூட்டணிக்கு பெரிய வாக்கு வங்கி உள்ளது. மதிமுகவும் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் சக்தியாக உள்ளது. திமுக வெற்றி பெற மதிமுக தங்களுடைய பங்களிப்பை செலுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் நாங்கள் கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்திய அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட வேண்டிய நபர் அமித்ஷா. அவர் இந்துத்துவா சக்திகளின் முதுகெலும்பாக இருந்து இந்துத்துவா சக்திகளை தூண்டி விடுகிறார்.

கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் கூட்டணி ஆட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லாமல், திமுகவை அறுதி பெரும்பான்மை பெற செய்து வாக்காளர்கள் வெற்றி பெற செய்வார்கள். அதையும் அமித்ஷா நிச்சயம் பார்ப்பார். மல்லை சத்யா கடந்த 4 ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக இல்லை, அவர் குறித்து எந்த கருத்தும் நான் கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* அதிமுக வசவாளர்கள் வாழ்க...

வைகோ கூறுகையில், ‘அதிமுகவுடன் கூட்டணி வைத்தது அரசியல் பிழை என மட்டுமே கூறினேன். அதிமுக குறித்தோ எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்தோ எந்த இழிவான விமர்சனங்களையும் நான் முன்வைக்கவில்லை. ஆனால் அதிமுகவை சேர்ந்த சிலர் என் மீது கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. வாழ்க வசவாளர்கள்’ என்றார்.