15 ஆயிரம் பேருக்கு ரூ.102.17 கோடியில் உதவிகள் வழங்கல்; ஊட்டியில் ரூ.499 கோடியில் அரசு மருத்துவமனை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
ஊட்டி: ஊட்டியில் ரூ.499 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில், ரூ.494.51கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 1,703 திட்ட பணிகளை திறந்து வைத்தும் ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 15,634 பயனாளிகளுக்கு ரூ.102.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் களஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விமானம் மூலம் கோவை வந்தார். இதன்பின்னர் கார் மூலம் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றார். இதன்பிறகு கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே நிலச்சரிவை தடுக்கும் வகையில் மண் ஆணி (கேபியான் சுவர்) அமைக்கும் பணியை முதல்வர் ஆய்வு செய்தார். இதையடுத்து ஊட்டி சென்ற முதல்வர், அங்குள்ள ஜெம்பார்க் ஓட்டலில் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் 52 பேருடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அங்கிருந்து தமிழகம் மாளிகை சென்ற அவர் நேற்றிரவு அங்கு தங்கினார்.
இன்று காலை 10 மணி அளவில், விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதல்வருக்கு பழங்குடி மக்கள் வரவேற்பு அளித்தனர். பழங்குடியினரின் கலாச்சார நடனத்தை பார்வையிட்டார். இதன் பிறகு ஊட்டி எச்பிஎப் பகுதியில் ரூ.499 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்துவைத்து மருத்துவமனையின் வளாக வரைபடம், அறுவை சிகிச்சை அரங்கம், அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவமனையில் உள்ள அதி நவீன மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். காலை 11 மணியளவில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வந்தார்.
முன்னதாக காவல்துறையின் மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வருக்கு அரசு அலுவலர்கள் புத்தகங்கள் வழங்கி வரவேற்பு அளித்தனர். பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து அங்கு ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 1,703 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் 15 ஆயிரத்து 634 பயனாளிகளுக்கு ரூ.102.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், நீலகிரி எம்பி ஆ.ராசா, அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், ஊட்டி எம்எல்ஏ கணேஷ், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னீரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்று மாலை 6 மணியளவில் கோவை கொடிசியா வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வள்ளி கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு வள்ளி கும்மியில் கின்னஸ் சாதனை புரிந்த 16 ஆயிரம் பெண்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் முதல்வர் சாதனை பெண்களை பாராட்டி பேசுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு மாலை 6.30 மணியளவில் கோவை விமான நிலையம் செல்கிறார். இரவு 7.20 மணி அளவில் இண்டிகோ விமானம் மூலம் கோவையில் இருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.