Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் விரைவில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் விரைவில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் ஐடிசி அகாடமி சார்பில் 72 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் 17 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கூடுதல் செயலர் குமார் ஜெயந்த், நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஐசிடி அகாடமி உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: கடந்த 2008ம் ஆண்டு கலைஞரின் ஆட்சி காலத்தில் ஐடிசி நிறுவனம் தொடங்கப்பட்டது. இது 10 மாநிலங்களில் மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் இளைஞர்களுக்கு திறன் வளர் பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அரசு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் 17 முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுதவிர முதல்வர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவில் ஐடி நிறுவனங்களில் கன்னடர்களுக்கே முன்னுரிமை என்ற அறிவிப்பை தொடர்ந்து பெங்களூருவில் நிலையற்ற தன்மை உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்திற்கு புதிய ஐடி நிறுவனங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.