சிட்டி யூனியன் வங்கியின் முதல் காலாண்டில் ரூ.1,19,754 கோடிக்கு வர்த்தகம்: நிகர மதிப்பு ரூ.9,686 கோடி; நிகர லாபம் ரூ.306 கோடி; நிர்வாக இயக்குனர் காமகோடி தகவல்
சென்னை: சிட்டி யூனியன் வங்கியின் முதல் காலாண்டில் ரூ.1,19,754 கோடிக்கு வர்த்தமாகி இருப்பதாகவும், நிகர மதிப்பு ரூ.9,686 கோடி; நிகர லாபம் ரூ.306 கோடி உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் காமகோடி தகவல் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் 2025-26ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி காமகோடி சென்னையில் வெளியிட்டார்.
பின்னர் வங்கியின் வளர்ச்சி மற்றும் எதிர்க்கால திட்டங்கள் குறித்து அவர் பேசியதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் வங்கியின் மொத்த வியாாரம் 18 சதவீதம் உயர்ந்து ரூ.1,19,754 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், வங்கியின் வைப்பு தொகை 20 சதவீதம் உயர்ந்து ரூ.65,734 கோடியாகவும் மற்றும் கடன்கள் கடந்த ஆண்டைவிட 16 சதவீதம் உயர்ந்து ரூ.54,020 கோடியாகவும் உள்ளது. மேலும், முதலாம் காலாண்டில் வங்கியின் மொத்த லாபம் 21 சதவீதம் அதிகரித்து ரூ.451 கோடியாக உள்ளது. அதே சமயம் வங்கியின் நிகர லாபம் 16 சதவீதம் அதிகரித்து ரூ.306 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுதவிர, வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.625 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் வரா கடன் பொறுத்தவரை 2.99 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் வங்கியின் நிகர வராக் கடன் 1.20 சதவீதமாக குறைந்துள்ளது. வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.55 சதவீதமாக உள்ளது. தற்போது 876 கிளைகள் மற்றும் 1776 தானியங்கி பட்டுவாடா இயந்திரங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி, வங்கியின் நிகர மதிப்பு கடந்தாண்டில் இருந்த மதிப்பான ரூ.9417 கோடியில் இருந்து ரூ.9686 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.