சென்னை: டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்று ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஊதிய உயர்வை வழங்குவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், சட்டப் பேரவை அறிவிப்பின்படி டாஸ்மாக் பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரூ.2000 ஊதிய உயர்வு வழங்கப்படும். இதில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஊதிய உயர்வு தொகை 2 நாட்களில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதைத் தவிர்த்து விதிகளை மீறி பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்த குற்றச்சாட்டில் சிக்கிய 451 கடை ஊழியர்களுக்கு ரூ.1000 மட்டும் ஊதிய உயர்வு வழங்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.