பண்ருட்டி: பண்ருட்டி அருகே கள ஆய்வில் சோழர் கால வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் கல்லூரி மாணவர்கள் வினோத்குமார், தேவா, சாமுவேல், டேவிட் ராஜ்குமார் ஆகியோர் மேற்புர கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு நாணயத்தை கண்டெடுத்து அதை தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேலிடம் கொடுத்தனர். பின்னர் நாணயத்தை சுத்தம் செய்து பார்த்ததில் அது ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம் என தெரியவந்தது. இதுகுறித்து தொல்லியல் அய்வாளர் இம்மானுவேல் கூறுகையில், இந்த நாணயம் சுமார் 4.35 கிராம் எடை கொண்டதாக உள்ளது. மேலும் நாணயத்தின் ஒரு பக்கம் மலரை கையில் ஏந்தியவாரு ஒருவர் நிற்க, அவரது இடது பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது.
நாணயத்தின் மறுபக்கம் கையில் ஒருவர் சங்கு ஏந்தி அமர்ந்திருக்கிறார். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்தில் \\”ஸ்ரீராஜராஜ\\” என எழுதப்பட்டுள்ளது. இதுவரை பெண்ணை ஆற்றின் மேற்பரப்பு ஆய்வில் 50க்கும் மேற்பட்ட ராஜராஜ சோழனின் செப்பு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. முதன் முறையாக ராஜராஜ சோழனின் வெள்ளி நாணயம் களஆய்வில் கிடைத்துள்ளது. தமிழகத்தில் சங்ககால மன்னர்கள் மற்றும் அரசாண்ட சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் தாமிரபரணி, வைகை, காவிரி போன்ற ஆற்றுப்படுகையில் ஆய்வாளர்களால் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.


