சித்தூரில் ஏசி டிரைன் வழியாக சென்று நகை, பர்னீச்சர் கடையில் 250 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி, ரூ.2.50 லட்சம் திருட்டு
*மர்ம நபர்கள் கைவரிசை
சித்தூர் : சித்தூர் மாநகரத்தில் ஜண்டா மானு தெருவில் நகைக்கடை மற்றும் ஸ்டீல் பர்னீச்சர் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடைகளை நேற்று முன்தினம் இரவு அதன் உரிமையாளர்கள் வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை 2 கடைகளின் உரிமையாளர்கள் திறந்து பார்த்த போது திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து 2 கடை உரிமையாளர்கள் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தகவலறிந்து வந்த எஸ்பி மணிகண்டா விசாரணை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜண்டா மானு தெருவில் இயங்கி வரும் நகை கடையின் பின்புறம் உள்ள ஏசி டிரைன் வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
மேலும் நகைகடையில் இருந்து 250 கிராம் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். அதேபோல் அருகே உள்ள பர்னீச்சர் கடைக்குள் புகுந்து ரூ.2 லட்சம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
மர்ம நபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, நகர டிஎஸ்பி சாய்நாத், 2வது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நெட்டிக்கண்டையா உடனிருந்தனர்.