Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீனா குறித்த மோடியின் பதில் கோழைத்தனத்தின் உச்சம்; 140 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் கடும் விளாசல்

புதுடெல்லி: சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக 140 கோடி மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கடுமையாக விளாசி உள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் நியூஸ் வீக் இதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அதில்,’இந்தியாவின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான நிலையான, அமைதியான உறவுகள் முழு பிராந்தியத்திற்கும், உலகிற்கும் முக்கியம். எல்லை பிரச்னை தொடர்பாக நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். எல்லைகளில் அமைதியை மீட்கவும், அமைதியை பராமரிக்கவும் இருநாடுகளும் ராஜதந்திர மற்றும் ராணுவ மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியாவின் விரைவான மேல்நோக்கிய பொருளாதாரப் பாதை அமெரிக்காவிற்கும் , உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று கூறியிருந்தார்.

மோடியின் இந்த பதில்களுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்ரமேஷ் கூறியதாவது:

அமெரிக்க பத்திரிகையான நியூஸ் வீக்கிற்கு பேட்டி அளிக்கும் போது பிரதமர் மோடி சீனா குறித்து கூறியது கோழைத்தனத்தின் உச்சம். இந்திய இறையாண்மை மீதான சீனாவின் தொடர்ச்சியான மீறல்கள் குறித்த அவரது ஒரே கருத்து, இருதரப்பு தொடர்புகளில் உள்ள அசாதாரணத்தை தீர்க்க இந்தியா-சீனா எல்லை நிலைமை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

சீனாவுக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்ப பிரதமருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், அவரது பயனற்ற மற்றும் பலவீனமான பதிலால், இந்திய நிலப்பரப்பில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்த மேலும் ஊக்கமளிக்கும். சீனா விவகாரத்தில் பிரதமரின் எதிர்வினை வெட்கக்கேடானது மட்டுமல்ல, நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் உயர்ந்த தியாகம் செய்த நமது தியாகிகளை அவமதிக்கும் வகையிலும் உள்ளது. 2020 ஜூன் 19 அன்று ‘யாரும் நுழையவில்லை, யாரும் நுழைய முடியாது’ என்று கூறி 140 கோடி இந்தியர்களை ஏமாற்றியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் சீனாவுடனான எல்லைகளை பாதுகாப்பதில் தனது தோல்விகள் குறித்து தேசத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.