Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஆபத்தை உணராமல் மீன் பிடித்து விளையாடும் சிறுவர்கள்

திருப்பூர் : கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர் , ஈரோடு வழியாக கரூரில் நிறைவடைகிறது நொய்யல் ஆறு. இந்த நொய்யல் ஆறு சுமார் 13 கி.மீ. தூரத்திற்கு திருப்பூர் மாநகரம் வழியாக செல்கிறது. கேரளா மற்றும் கோவை மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் சமயங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

வழக்கமாக, ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே மே இறுதியில் தொடங்கியுள்ளது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிவு அதிகரித்துள்ள நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் கடந்த 3 தினங்களாக மழைப்பொழிவு அதிகரித்துள்ளது.

கடந்த 25 மற்றும் 26ம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. கேரள மாநிலம் மற்றும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோவை நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, திருப்பூர் மாநகரின் வழியே பாயும் நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் பெருக்கு அதிகரித்தது. வழக்கத்தைவிட தண்ணீரின் அளவு அதிகரித்து செல்வதன் காரணமாக அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலம் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பூர் யூனியன் மில் சாலை அருகே உள்ள அணைக்காடு பகுதியில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக செல்கிறது. இதில், அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை சாதகமாக பயன்படுத்தி சிறிய அளவிலான வலை, வேட்டி மற்றும் தாங்கள் அணிந்திருந்த துணிகளை கொண்டு நொய்யல் ஆற்றின் நடுவில் நின்று மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆபத்தான நிலையில் ஆபத்தை உணராமல் அங்கும் இங்கும் ஓடியவாறு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை கிலோ முதல் 2 கிலோ வரையிலான ஜிலேபி வகை மீன்கள் பிடிக்கப்பட்டதாக சிறுவர்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கும் போது வழக்கமாக திருப்பூர் மாநகரின் வழியே பாயும் நொய்யலாற்றிலும் தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இது போன்ற நேரங்களில் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்து செல்வர்.

தண்ணீர் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருக்கக்கூடிய சூழ்நிலையில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் நொய்யல் ஆற்றில் நடுவில் நின்று கொண்டு மீன் பிடித்து விளையாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பெற்றோர்கள் சிறுவர்களை கண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆய்வு அவசியம்

மழை நேரங்களில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது முறைகேடாக இயங்கும் சாய சலவை ஆலைகள் கடந்த காலங்களில் சாய கழிவு நீரை சுத்தகரிப்பு செய்யாமல் திறந்து விட்டன. அதுபோன்று இந்த ஆண்டு நிகழாத வண்ணம் முன்கூட்டியே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.