Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று சென்னையில் மீண்டும் போர்டு நிறுவனம் கார் உற்பத்தி ஆலையை தொடங்குகிறது: முதல்வரின் அமெரிக்க பயணத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி என தொழில்துறையினர் கருத்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று போர்டு நிறுவனம் சென்னையில் மீண்டும் கார் உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அறிவிப்பு செய்துள்ளது. இது தமிழக முதல்வரின் அமெரிக்க பயணத்தின்போது கிடைத்த மாபெரும் வெற்றி என கருதப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணத்தின்போது கடந்த 10ம் தேதி சிகாகோவில் போர்டு நிறுவனத்தின் ஐஎம்ஜி தலைவர் கே. ஹார்ட், துணை தலைவர் (சர்வதேச அரசாங்க விவகாரங்கள்) மேத்யூ கோட்லெவ்ஸ்கி, போர்டு இந்தியா இயக்குநர் (அரசாங்க விவகாரங்கள்) டாக்டர் ஸ்ரீபாத் பட் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.

அப்போது, சென்னையில் மீண்டும் போர்டு கார் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முதல்வர் வேண்டுகோளை ஏற்று போர்டு கார் நிறுவனம் மீண்டும் சென்னை அருகே கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக தமிழக அரசிடம் கடிதம் வழங்கி உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது. போர்டு நிறுவனம், 2021ல் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. சென்னை மறைமலைநகர், குஜராத்தின் சனந்த் பகுதிகளில் செயல்பட்டு வந்த போர்ட் ஆலைகள் 2021ல் மூடப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தி ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக போர்டு நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டில் இருந்தே தமிழக அரசு சார்பில் போர்டு நிறுவன அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மின்வாகன தொழில்சூழல் குறித்தும், மின்வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவது குறித்தும், சென்னையை விட்டு போர்டு நிறுவனம் வெளியேறிய 2021ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி குறித்தும் அரசு தரப்பில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, போர்டு நிறுவனம் மீண்டும் சென்னையில் தனது ஆலையை தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும், தமிழ்நாட்டின் ஆட்டோமேட்டிவ் தொழிற்பரப்பில் போர்டு நிறுவனம் மீண்டும் நுழைவதற்கான ஒத்துழைப்பை நல்குவதாகவும் கடந்த 10ம் தேதி சிகாகோவில் நடந்த சந்திப்பின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவிடம் நேரடியாகவே வாக்குறுதி அளித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே தற்போது போர்டு நிறுவனம் மீண்டும் சென்னைக்கு வர வழிவகுத்துள்ளது. இது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போதைய அமெரிக்க பயணத்தின் போது கிடைத்த மாபெரும் வெற்றியாக தொழில்துறையினரால் பேசப்படுகிறது.

* 12,000 பேருக்கு வேலை கிடைக்கும்

தற்போது சென்னை மறைமலைநகரில் உள்ள போர்டு ஆலை மீண்டும் திறக்கப்பட இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது. மீண்டும் ஆலையை திறக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கு போர்டு நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார கார்களை தயாரிக்க போர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் போர்டு ஆலை அமைவதன் மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஓசூரில் ரூ.100 கோடியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்க முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கு ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்துடன் ரூ.100 கோடி முதலீட்டில், அமெரிக்காவின் சிகாகோவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 12ம் தேதி சிகாகோவில், ஆர்ஜிபிஎஸ்ஐ என்று அழைக்கப்படும் ரேபிட் குளோபல் பிசினஸ் சொல்யூஷன் நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந் நிறுவனம் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பணியாளர் மேலாண்மை, பொறியியல், தரமான வாழ்க்கைச் சுழற்சி மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப தீர்வுகளையும், பல துறைகளுக்கான மேம்பட்ட மின்னணு மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளையும் வழங்கும் நிறுவனமாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.100 கோடி முதலீட்டில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் நானுவா சிங், தலைவர் மற்றும் முதன்மை அலுவலர் ரவிக்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.