முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை வைத்தும் கல்வி திட்டத்திற்கு 4 தவணை நிதி ஒன்றிய அரசு வழங்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
வேலூர்: தமிழக முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை வைத்தும், கல்வி திட்டத்திற்கு 4 தவணையாக வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வாணியம்பாடி அருகே பொதுப்பணித்துறை புதிய பயணியர் மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதலமைச்சர் 2 முறையும், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் டெல்லிக்கு சென்று ஒன்றிய கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதியை வழங்க கோரிக்கை வைத்தோம்.
4 தவணையாக வரவேண்டிய நிதி இதுவரையில் வரவில்லை. தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தும் ஒன்றிய அரசிடமிருந்து இதுவரையில் நிதி வரவில்லை. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அதை சார்ந்து இருக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசின் நிதி வராததால், 32,298க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம், வழங்காததால், அவர்களின் வாழ்வாதாரம், மிகப்பெரிய கேள்விக்குறியாகக்கூடிய நிலை உள்ளது.முதல் தவணை என்று சொல்லக்கூடிய நிதியில், கிட்டத்தட்ட ரூ.573 கோடி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு 4வது தவணையாக ரூ.249 கோடி பணத்தை பாக்கி வைத்துள்ளனர்.
இதில் நம்முடைய மாணவர்களின் எதிர்காலம் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. இதனை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இதனை நம்முடைய தமிழக அரசு நிதியிலிருந்து எப்படி பங்கீட்டு சம்பளத்தை வழங்குவது குறித்து, ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். தமிழக அரசு என்பது ஆசிரியர் பெருமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், திராவிட மாடல் அரசு கைவிடாது. அதற்கான பணிகளில் எங்களை ஈடுபடுத்திக்கொள்வோம். ஒவ்வொரு அமைச்சரும், கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழக முதல்வரின் உத்தரவை ஏற்று ஒவ்வொரு தொகுதியாக சென்று 219 தொகுதியாக இதை நிறைவு செய்து இருக்கின்றோம்.
* ஹைடெக் ஆய்வுக்கூடங்களுடன் பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் புத்தகத்தில் ஏஐ பாடத்திட்டத்தைக் கொண்டு வர உள்ளோம். அதற்காக அரசு பள்ளிகளில் ஹைடெக் ஆய்வுக்கூடங்களாக மேம்படுத்தப்படும். நமது மாணவர்களை பொறுத்தவரை, உலகில் எந்த டெக்னாலஜி வந்தாலும், அதை நம் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் டெக்னாலஜி மேம்படுத்தப்படும்’ என்றார்.