Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதால் திமுகவை ஒழிக்க ஒரு கூட்டம் துடிக்கிறது: திருச்சி சிவா பேச்சு

பெரம்பூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதால் அவற்றை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு கூட்டம் திமுகவை ஒழிக்க துடிக்கிறது என்ற திருச்சி சிவா எம்பி பேசினார்.சென்னை புரசைவாக்கம் தானா தெருவில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ‘’ஓரணியில் தமிழ்நாடு’’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பகுதி செயலாளர் சொ.வேலு தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக துணை பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என்.சிவா, கனிமொழி சோமு எம்பி ஆகியோர் கலந்துகொண்டு திராவிட ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்தனர். இதில், தாயகம் கவி எம்எல்ஏ, மேயர் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில், திருச்சி என்.சிவா பேசியதாவது; திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரி என்று சிலபேர் சொல்லி வருகின்றனர். அதுக்கு பதிலடியாக தான் அர்ச்சகர்களுக்கு பணி ஆணைகள், பெண் அர்ச்சகர்கள், ஏராளமான குடமுழுக்கு நிகழ்ச்சிகள் என செய்து வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்று முதலமைச்சர் சொன்னதை போலவும் வாக்கு அளித்தவர்கள், அளிக்காதவர்கள் என எந்த பாகுபாடின்றியும் அனைவருக்கும் எல்லாம் செய்து வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் தமிழக முதலமைச்சர், மகளிருக்கான திட்டங்கள் ஏராளமாக செய்து வருகிறார். திமுகவில் உள்ள பெண்கள் என்று பார்க்கவில்லை, அதிமுக என அனைத்து கட்சியில் உள்ள பெண்களுக்குமான திட்டத்தைதான் அவர் செய்து வருகிறார். சமூக நீதிக்கு என்ன தேவை என்பதை அறிந்து அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் செய்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் காவலர்கள் தாக்கி இறந்த நபரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டவர் முதலமைச்சர். அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுத்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பணிகளும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தார். ஜெயலலிதா ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் நடைபெற்ற தாக்குதலில் இறந்தவர்களுக்கு யாரும் மன்னிப்பு கேட்டதில்லை. மக்களுக்கான தேவைகளை அறிந்து பார்த்து பார்த்து செய்து வருகிறார் முதலமைச்சர். இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் ஒரு கூட்டம் இந்த ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று அலைந்துகொண்டு இருக்கிறது. திராவிடத்தை வீழ்த்துவோம் என்று துடித்துகொண்டு இருப்பவர்களுக்காக தான் நம்முடைய முதலமைச்சரால் கொண்டு வரப்பட்டது இந்த ஓரணியில் தமிழ்நாடு.

நான் முதல்வன் திட்டம் மூலம் 40 லட்சம் இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். 10 லட்சத்திற்கும் மேல் வேலை வாய்ப்பை பெற்று பயனடைந்துள்ளார்கள். இளைஞர்கள் தற்போது நான் முதல்வன் என்று பெருமையோடு கூறி வருகிறார்கள்.இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ, பகுதி செயலாளர் சுதாகர், தமிழன் பிரசன்னா, யாழினி, ஏகப்பன், நாதன், மனோகர், பாலு, இசட் ஆசாத் கலந்துகொண்டனர்.