Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் சீர்மிகு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் சீர்மிகு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. பின்வருமாறு;

1.17 இலட்சம் காவல் பணியாளருக்கு ரூ.5,000 வீதம் ரூ.58.50 கோடி கொரோனா உதவித் தொகை !

ரூ.44.46 கோடியில் புதிய ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கு வாகனங்கள் !

58 புதிய மகளிர் காவல் நிலையங்கள் !

21 புதிய தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள் !

சிறைவாசிகள் பயன்பாட்டிற்கு 1 இலட்சம் புத்தகங்கள் !

தீவிபத்திலும் வெள்ளத்திலும் சிக்கிய 42,224 மனித உயிர்களும் ரூ.605 கோடி மதிப்புடைய உடைமைகளும் மீட்பு !

தமிழ்நாடு அரசின் காவல்துறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பழைமையான துறை. 1964-68, 1971-76 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறை தலைவராக - ஐ.ஜி.யாகத் திகழ்ந்தவர் எப்.வி.அருள். அக்காலத்தில் டி.ஜி.பி என்னும் பதவி இல்லை. ஐ.ஜி பதவி மட்டுமே இருந்தது. ஐ.ஜி-யாக இருந்த எப்.வி.அருள் அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொண்ட; இண்டர்போல் என்னும் பன்னாட்டுக் காவல் நிருவாகத்தில் துணைத் தலைவராக விளங்கித் தமிழ்நாட்டிற்குப் புகழ் சேர்த்தவர். இந்திய காவல்துறை வரலாற்றில் முதன் முதல் நவீனமயமானது தமிழ்நாடு காவல்துறைதான்.

தமிழ்நாடு காவல்துறை தலைவராகத் திகழ்ந்த எப்.வி.அருள் அவர்கள் எழுதிய போலீஸ் டைரி எனும் நூலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1969இல் நியமித்த முதல் காவல் ஆணையம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் நிதியுதவிகளால் இந்தியாவிலேயே முதன்முதலாக 1971இல் தமிழ்நாடு காவல்துறையை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கின என்று எழுதியுள்ளார். அதன் பிறகுதான் இந்தியாவில் ஒன்றிய அரசிலும், மாநிலங்களிலும் காவல்துறையை நவீனமயமாக்கும் பணிகளைத் தொடங்கினார்கள். அப்போது முதல் தமிழ்நாட்டுக் காவல்துறை இந்தியாவிற்கு வழிகாட்டும் துறையாகவே வளர்ந்து திகழ்ந்து வருகிறது.

சட்டம் ஒழுங்கை காப்பதில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசுத் துறைகள் அனைத்தையும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். தம்முடைய பொறுப்பிலேயே உள்ள காவல்துறையைச் சீராக வளர்த்துத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை மிகவும் சிறப்பாகப் பராமரித்து இந்தியா அளவில் தமிழ்நாட்டிற்குப் புகழ் சேர்த்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களைத் தடுக்கும் துறையாகச் செயல்பபட வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்புகளின் மேம்பாட்டில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.

எனவே, சட்டம் ஒழுங்கை தொடர்ந்து காப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் அதிகமாகக் கூடும் அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி வந்துள்ளது. 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவங்கை கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி, சுமுகமாக நடத்திக் காட்டியது. அதற்காக அந்தப் பகுதி மக்கள் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிப் பாராட்டினார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாக விளங்குவதால் மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. எடுத்துக்காட்டாக :

Ø 40 இலட்சம் பேர் கூடிய திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா

Ø 2 இலட்சம்பேர் பங்கெடுத்த மதுரை சித்திரைத் திருவிழா

Ø 8 இலட்சம் பேர் திரண்ட திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

Ø 5 இலட்சம் பேர் கூடிய பழனி தைப் பூசத் திருவிழா

Ø 12 இலட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா

Ø 3 இலட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றத் திருவிழா

Ø 20 ஆயிரம்பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா

உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது நமது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாகப் பராமரிக்கப்படுவதன் அடையாளமாகும். இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதி மிகு மாநிலமாக அது இருப்பதால்தான்.

முதலைமைச்சர் அவர்கள் காவல் பணியாளர்களின்கொரோனா கால சிறப்புப் பணிகளை பாராட்டி ரூ.58.50 கோடி ஊக்கத்தொகை

கொரோனா தொற்றுத் தடுப்பில் களப்பணியாற்றிய 1.17 லட்சம் காவல் துறையினருக்கு ஊக்கத்தொகையாகத் தலா ரூ.5,000 வீதம் 58.50 கோடி ரூபாய் வழங்கினார்கள்.

முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ள ஐந்தாவது காவல்ஆணையம்

காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்திடவும், காவல் பணியாளர்களின் நலன்களைக் காத்திடவும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையம் அமைத்துள்ளார்கள்.

புதிதாக ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை நிர்வாக ரீதியாக பிரித்து ஆவடி, தாம்பரம் என இரு புதிய ஆணையரகங்களை உருவாக்கி; அவற்றுக்கு ரூ.44.46 கோடியில் 352 நான்கு சக்கர வாகனங்களையும், 396 இரண்டு சக்கர வாகனங்களையும் வழங்கி அவை மக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை உறுதி செய்யவும், அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யவும், ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களில் புதிதாக சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு, ரூபாய் 1.91 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது.

முதலமைச்சர் புதியதாக உருவாக்கியுள்ள 58 புதிய மகளிர் காவல் நிலையங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட அனைத்துக் காவல் உட்கோட்டங்களிலும் 39 புதிய மகளிர் காவல் நிலையங்களையும் கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உள்ளிட்ட 19 இடங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்களையும் ஏற்படுத்தியுள்ளார்.

முதலமைச்சர் கொண்டாடிய காவல்துறை மகளிர் பொன்விழா

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல் துறையில் மகளிர் காவலர்கள் நியமிக்கப்பட்ட 50-ஆம் ஆண்டு நிறைவையொட்டி 17.3.2023 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்புத் தபால் உறையை வெளியிட்டார்கள். அத்துடன், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘அவள்' (AVAL - Avoid Violence Through Awareness and Learning) திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்கள்.

முதலமைச்சர் அவர்கள் திறந்த காவலர் குடியிருப்புகள்

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படைகளுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்கள் ஆகியவற்றை 4.1.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 481.92 கோடி ரூபாய்ச் செலவில் 2,882 காவல்துறை வாடகைக் குடியிருப்புகள் 42.88 கோடி ரூபாய்ச் செலவில் 42 காவல் நிலையங்கள், 84.53 கோடி ரூபாய்ச் செலவில் 14 இதர காவல் துறை கட்டடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

முதலமைச்சர் காவல்துறைக்கு வழங்கிய புதிய வாகனங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 22.1.2024 அன்று சென்னை பெருநகர காவல் துறையின் பயன்பாட்டுக்காக 25 ஹூண்டாய் கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா, 20 பொலிரோ ஜீப் வாகனங்கள் வழங்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை ரூ.2.80 கோடியில் சிறைவாசிகளுக்கான நூலகங்கள் மேம்பாடு

அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் 14 மாவட்ட சிறைகள், 112 கிளை சிறைகள்/தனிச்சிறைகள்/ திறந்த வெளிச்சிறைகள் ஆகியவற்றில் உள்ள நூலகங்கள் ரூ.2.80 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக இத்துறை பங்கேற்று 1,00,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக நன்கொடையாகச் சேகரிக்கப்பட்டன.

முதலமைச்சர்கள் சிறைவாசிகளுக்காக வழங்கிய நூல்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் சிறை நூலகங்களுக்கு 1,500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்படத்தக்கது.

சிறைக் கட்டடங்களும் குடியிருப்புகளும்

ரூ.45.26 கோடி செலவில் 94 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

முதலமைச்சர் அவர்கள் ரூ.26 கோடியில் சிறைவாசிகளுக்கு ஏற்படுத்திய புதிய உணவுமுறை

முதலமைச்சர் அவர்கள், நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூபாய் 26 கோடி கூடுதல் செலவில் சிறைவாசிகளுக்கான புதிய உணவு முறையை மாற்றியமைத்திட ஆணை பிறப்பித்தார்கள். அதன்படி புதிய உணவுமுறை 5.6.2023 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

2021 முதல் 2023 முடிய இத்துறைப் பணியாளர்கள் 61,288 தீ விபத்து அழைப்புகளிலும், 2,57,209 மீட்பு அழைப்புகளிலும் பணியாற்றி 42,224 மனித உயிர்களையும், ரூ.605.06 கோடி மதிப்புள்ள உடைமைகளையும் காப்பாற்றி அரும்பணி புரிந்துள்ளார்.

ரூ.55.60 கோடியில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தீயணைப்புப் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ரூ.55.62 கோடி செலவில் தலைக்கவசம் மற்றும் காலணியுடன் கூடிய 1850 தீ பாதுகாப்பு உடைகள், 650 மூச்சுக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய 3500 மீட்பு உடைகள் வாங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

ரூ.86.83 கோடியில் நவீன வாகனங்கள் மற்றும் உபகரணங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.72.82 கோடி வழங்கி, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறைக்காக 75 புதிய நீர்தாங்கி வண்டிகள், 12 அவசரகால சிறிய மீட்பூர்திகள், 44 பெரும் தண்ணீர் லாரிகள், ஒரு வான்நோக்கி நகரும் ஏணி கொண்ட ஊர்தி, 7 அதி உயரழுத்த நீர்தாங்கி வண்டி, 1 சிறிய நுரைநகர்வு ஊர்தி, 50 ட்ரோன்கள், 4 புகைவெளியேற்றும் கருவி, 21 கோம்பி கருவிகள், ஆட்களை ஏற்றிச் செல்லும் ஊர்திகள் 4 முதலியன கொள்முதல் செய்யப்படுகின்றன.

ரூ.92.40 கோடியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.45.82 கோடி செலவில் காஞ்சிபுரம், தேனாம்பேட்டை, திருவையாறு, கடமலைக்குண்டு, இராஜபாளையம், செங்குன்றம், மணலி, வண்ணாரப்பேட்டை, சேலம் திருவரங்கம் ஆகிய தீயணைப்பு - மீட்புப் பணி நிலையங்களுக்கும், காஞ்சிபுரத்திற்கும் மற்றும் அம்பத்தூரில் சென்னை புறநகர் மாவட்ட அலுவலகத்திற்கும் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு ஆணையிட்டுள்ளார்கள். மேலும், ரூ. 40.63 கோடி செலவில் செங்குன்றம், போடிநாயக்கனூர், துறையூர், இராணிப்பேட்டை, சிவகாசி, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு 173 குடியிருப்புகள் கட்டவும் ரூ.5.95 கோடி செலவினத்தில் திருவல்லிக்கேணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களுக்குப் புதிய கட்டடம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

ரூ.69.43 கோடியில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள்

பொதுமக்களின் சிறப்பான சேவைக்கென ரூ. 62.18 கோடி செலவில் திங்கள்நகர், கோவைபுதூர், சின்னமனூர், வாய்மேடு, தெள்ளார், அன்னியூர், திருப்பரங்குன்றம், ஏழாயிரம்பண்ணை, கொளத்தூர், காலவாக்கம், கண்ணமங்கலம், ஆட்டையாம்பட்டி, ஊத்துக்குளி, இளையாங்குடி, வையம்பட்டி, குமராட்சி, நயினார்பாளையம், ஒரகடம், திருவெறும்பூர், இராதாபுரம், ரிசிவந்தியம் ஆகிய 21 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்ளும் சிவகாசி, ஓசூர், தாம்பரம், இராணிப்பேட்டை ஆகிய 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு நிலையங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்கள் ரூ.1.06 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றன.

ரூ.39.30 கோடி செலவில் மாநில பயிற்சிக் கழகம்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தீயணைப்பு மீட்புப் பணித்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை மேம்படுத்தும் விதமாக ரூ. 39.30 கோடி செலவில் மாநிலப் பயிற்சிக் கழகம் மற்றும் உலகத்தரத்திலான நிகழ்நேர மாதிரி கூடம் ஆகியவற்றை காலவாக்கத்தில் அமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்கள். இவற்றின் வாயிலாக - தமிழ்நாட்டின் காவல்துறை - சிறைத்துறை - தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் அனைத்தும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் சீர்மிகு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிப்படுகிறது.