Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண்பதை உறுதி செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மக்களின் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, தலைமைச்செயலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பயனாளிகளிடமும் கேட்டறிந்தார். இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர்கள் முதல்வருக்கு அளித்த விளக்கம் பின்வருமாறு: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்: முகாம் ஒன்றிற்கு சராசரியாக 900 மனுக்கள் பெறப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 19 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்: 19 கவுன்ட்டர்கள் கணிணி வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு மனுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 7400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மருத்துவ காப்பீட்டு அட்டை போன்றவற்றை கோரி அதிகமாக மனுக்கள் வருகின்றன. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா: 15 முகாம்கள் மூலமாக 6700 மனுக்களை பெற்றுள்ளோம். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை மனுக்கள் வாங்கப்படுகின்றன.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி: வேலூர் மாவட்டத்தில் 21,654 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் அளிக்க வருகை தரும் பொதுமக்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. குறிப்பாக, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முதியோர் உதவித்தொகை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், பட்டா மாறுதல், போன்றவற்றை கோரி அதிகமாக மனுக்கள் வருகின்றன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி: தூத்துக்குடி மாவட்டத்தில் 32 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு, 26,468 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனைப் பட்டா, மனை உட்பிரிவு பெயர் மாற்றம், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் கோரியும், மின்சார இணைப்பு பெயர் மாற்றம் போன்றவற்றை கோரி அதிகமாக மனுக்கள் வருவாகவும் தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் விளக்கம் அளித்தனர்.

அதேபோல், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின், இத் திட்ட முகாம் குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்ட விவரங்கள் குறித்தும், முகாம்களில் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதற்கு அமைச்சர் மூர்த்தி இத்திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கிராமம் கிராமமாக சென்று ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலமாக விளம்பரம் செய்யப்பட்டதாகவும், முகாம் நடைபெறும் விவரம் குறித்து சுவரொட்டிகள் மூலமாகவும் விளம்பரம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷாநவாஸ் பேசுகையில், ‘‘அரசு அலுவலகங்களை நாடி மக்கள் சென்ற காலம் போய், மக்களைத் தேடி அரசு அலுவலர்கள் வருகை தந்து, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்று தெரிவித்தார். இதனையடுத்து, முகாம்களுக்கு வருகை தந்த பொதுமக்களிடம் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியனார்.

இறுதியாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம், மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு கண்டு, உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர் அமுதா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.