சென்னை: இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் ஜூன் 1ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற ஜூன் 1ம் தேதி (சனி) இறுதியாக 7வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
இதை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். அன்றைய தினமே மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிந்துவிடும். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியா கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அதே நேரம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ கூட்டணி 3வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று நாங்கள்தான் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகின்றனர். இதன் காரணமாக மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியா அல்லது மீண்டும் பாஜ தலைமையிலான ஆட்சி அமையுமா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வருகிற 1ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரிய லோக் தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன. இந்த 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் 1ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த மக்களவை தேர்தல் முடிவின்படி பாஜ மற்றும் காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக திமுக இருந்தது.
வரும் காலங்களிலும் திமுகதான் தேசிய அளவில் 3வது பெரிய கட்சியாக இருக்கும் என்று கருத்துக்கணிப்புகளின்படி தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், ஜூன் 1ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.
அதன்படி, வருகிற 1ம் தேதி காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். பின்னர் அன்று மாலை டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 2ம் தேதி சென்னை திரும்புகிறார். அதேநேரம், 1ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடப்பதால், இந்தியா கூட்டணி கட்சியின் ஆலோசனை கூட்டத்தை 2 அல்லது 3ம் தேதி நடத்த வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதனால், தேதி மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணத்தில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதற்கிடையே, இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் ஜூன் 1ம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
* இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரிய லோக் தளம் உள்பட 28 கட்சிகள் உள்ளன.
* 28 கட்சிகளின் தலைவர்களுக்கும் டெல்லியில் 1ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
* கடந்த மக்களவை தேர்தல் முடிவின்படி பாஜ மற்றும் காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக திமுக இருந்தது.
* ஜூன் 1ம் தேதி டெல்லி கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.