*அமைச்சர்கள் வழங்கினர்
ஈரோடு : பொதுமக்கள் அன்றாடம் அதிகமாக அணுகும் அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளை அடையாளம் கண்டு,வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து நகரப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சிகள் அளவில் ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெற்று சிறப்பு முகாம்கள் மூலமாக தீர்வு காண மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, முதற்கட்டமாக கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும், 2ம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, 3வது கட்டமாக ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டு, 15 அரசுத்துறை சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
அதன்படி, ஈரோடு மாவட் த்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அதிகம் வசிக்கும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 70 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த மாதம் 14,15ம் தேதிகளில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிகளில் 10 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டன.
மீதியுள்ள 60 முகாம்களில் நேற்று, ஈரோடு மேற்கு தொகுதிக்கு உள்பட்ட குமாரவலசு, கவுண்டிச்சிபாளையம், கூரபாளையம், பிச்சாண்டம்பாளையம், கதிரம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் இதற்கு முன்பு நடத்தப்பட்ட 10 முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 2,356 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 870 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.மேலும், முழுமையான தகவல்கள் அளிக்கப்படாத காரணத்தினால் 935 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதும் உரிய தகவல்கள் பெறப்பட்டு நிறைவேற்றப்படும். இதில் 551 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இம்முகாமில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை,கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா,தனி பட்டா,வீட்டுவரி பெயர் மாற்றம், மகளிர் சுய உதவிக்குழு கடன்,சாதி சான்று,வாரிசு சான்று,கூட்டுறவு கடன், நேரடி பொருளாதார கடன், மருத்துவ காப்பீடு அட்டைகள்,முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்ட ஆணைகள் என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.84.80 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
முகாம்களில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநிலங்களவை எம்.பி. அந்தியூர் செல்வராஜ், ஈரோடு எம்.பி. பிரகாஷ்,ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.சந்திரகுமார், ஈரோடு கோட்டாட்சியர் ரவி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் செல்வராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமாசங்கர், ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன், பெருந்துறை தாசில்தார் ஜெக நாதன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, வரும் 17, 19ம் தேதிகளில் மொடக்குறிச்சி தொகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.