சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்படும் என்று மாநகராட்சி ஆணையர் குமாரகுருபரன் அறிவித்துள்ளார்.வார்டு 138-ன் கவுன்சிலர் கண்ணன் மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காத பிரச்சனையை நேற்று மன்ற கூட்டத்தில் முன்வைத்தபின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். முன்பு இருந்த ஆர்ஒ சிஸ்டம்கள் பழுதாகி விட்டன. அதிகாரிகள் பராமரிக்க முடியாது என்று சொல்கிறார்கள். இது சரியான காரணமா? ஒவ்வொரு மாணவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆணையர் குமாரகுருபரன், ”பழைய ஆர்ஒ சிஸ்டம்கள் பழுதானபின் பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தது.
புதிய ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம் இயந்திரங்கள் நீரின் தரத்தை சுத்தமாக வைப்பதோடு, மாணவர்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க உதவும்.சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்படும்.என்று தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த திட்டமாகும்.
பள்ளிக் கல்வித் துறை மாணவர்களின் நீர்ச்சத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டத்தையும் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி தனி மணி அடித்து தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கப்பட்டு, வகுப்பறையை விட்டு வெளியே போகாமலேயே குழந்தைகள் தண்ணீர் குடிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். பல அரசுப் பள்ளிகளில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில், சுத்தமான குடிநீர் தொடர்ந்து கிடைக்காத நிலைமை நீடித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.