Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரத்திற்கு பிறகு இணையதள சேவை சீரானது: கணினி மூலம் மீண்டும் போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரத்திற்கு பின்பு, இணையதள சேவைகள் சீரடைந்தன. இதையடுத்து பயணிகளுக்கு மேனுவல் போர்டிங் பாஸ் கொடுப்பது நிறுத்தப்பட்டு, மீண்டும் கம்ப்யூட்டர் மூலமாக போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது. நேற்று மாலை அனைத்து விமான சேவைகளும் சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்பின. மைக்ரோசாப்ட் மென்பொருள் திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் நேற்று வங்கிகள், விமான சேவை, மருத்துவமனைகள் மற்றும் பங்கு சந்தை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் 1400 விமானங்களும் இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமானநிலையத்தில் ஒரே நாளில் 28 விமானங்கள் ரத்தானது.

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 50க்கும் மேற்பட்ட விமானங்கள் 3 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமானது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் 365 மென்பொருளை விமான நிறுவனங்கள், வங்கிகள், ஐ.டி. நிறுவனங்கள் பலவற்றில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மென்பொருள் நேற்றுமுன்தினம் திடீரென முடங்கியது. இதனால் விண்டோஸ் இணையதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்தனர். உலகெங்கும் விமானநிலையத்தில் கணினிகள் செயலிழந்ததால், விமான நிறுவன ஊழியர்கள் கையால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ்களை பயணிகளுக்கு வழங்கினர்.

16 விமானங்கள் ரத்து: இரண்டாவது நாளாக நேற்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. வருகை விமானங்கள் 8, புறப்பாடு விமானங்கள் 8 என மொத்தம் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், குவைத், அபுதாபி, தோகா, இலங்கை மற்றும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, அந்தமான், திருவனந்தபுரம், கொச்சி, திருச்சி, மதுரை செல்லும் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விமானங்கள் பலமணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. விமான நிலையம் வந்த பயணிகள் தாங்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே சாப்பிட்டனர். மேலும், பலர் விமான நிறுவன டிக்கெட் கவுன்டர்களை சூழ்ந்து கொண்டு எப்போது விமானம் புறப்படும் என கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் நேற்று பல நாடுகளில் விமானங்களின் சேவை படிப்படியாக சீரடைந்தது. சென்னை விமான நிலைய பொறியாளர்கள், இணையதள தொழில்நுட்ப வல்லுநர்கள் இரவு பகலாக பணியாற்றி சாப்ட்வேர் கோளாறுகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 24 மணி நேரத்துக்கு பின்பு நேற்று காலை 11 மணியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை சீரடைந்தது. இதையடுத்து பயணிகளுக்கு மேனுவல் முறையில் கைகளால் எழுதி வழங்கப்பட்ட போர்டிங் பாஸ்கள், மீண்டும் இணையதள சேவை மூலம் வழங்கப்பட்டதால் விமான நிலைய அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். அதோடு கணினி முறையில் உடனடியாக போர்டிங் பாஸ்கள் கிடைப்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன்காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக விமான சேவைகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவுக்கு வந்தது. ஆனாலும் நேற்று மாலையில் இருந்துதான் முழுமையான விமான சேவை தொடங்கியது.