சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு வாலிபரின் தூக்கு தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
* ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கருத்து
* சிசிடிவி காட்சி, டிஎன்ஏ பரிசோதனை சரிவர ஒத்துப்போகவில்லை
சென்னை: போரூரில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. சென்னை போரூருக்கு அருகில் உள்ள மதனந்தபுரத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி 2017 பிப்ரவரி 5ம் தேதி காணாமல் போனாள். இதையடுத்து மாங்காடு காவல்துறையில் அந்த குழந்தையின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் மாங்காடு போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையின் வீட்டின் அருகில் வசித்த தஷ்வந்த் என்ற வாலிபர் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது கடத்தல், கொலை, பாலியல் பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், தஷ்வந்த் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது செலவுக்கு பணம் கொடுக்கவில்லை எனக்கூறி, தனது தாயை கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டான். அவரை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தஷ்வந்தை மும்பையில் கைது செய்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது.
சாட்சிகள் விசாரணை துரிதமாக நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையும் 46 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. தாயை கொலை செய்த வழக்கில் தஷ்வந்தின் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் அவரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு நகல் உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதே நேரத்தில் தஷ்வந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதாக கூறி விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து தஷ்வந்தின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யவும், தன்னை விடுதலை செய்யவும் உத்தரவிடக்கோரி தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், தஷ்வந்துக்கு எதிராக போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்ைல. கொலை தொடர்பான வீடியோக்கள், சிசிடிவி காட்சிகளில் கொலை செய்தது தஷ்வந்த்தான் என்பதை உறுதி ெசய்யவில்லை. தஷ்வந்திடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ சோதனையும் ஒத்துப்போகவில்லை. எனவே, சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து மரண தண்டனை வழங்கிய கிழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. போலீசார் குற்றத்தை உறுதிசெய்ய தவறிவிட்டதால், குற்றவாளியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தனர்.