Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் முதல் முறையாக இரவு நேர கார் பந்தயம்: ஆக. 30ல் தொடக்கம்

சென்னை: நாட்டில் முதல் முறையாக இரவு நேர தெரு கார் பந்தயம் சென்னையில் ஆகஸ்ட் 30ல் தொடங்கி செப்.1 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த இந்த பந்தயம், மிக்ஜாம் புயல் உள்ளிட்ட காரணங்களால் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த அறிமுக விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், போட்டியை நடத்தும் ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடட் தலைவர் அகிலேஷ் ரெட்டி, இயக்குநர் அபிநந்தன், இந்திய மோட்டார் பந்தய கிளப் கூட்டமைப்பு தலைவர் அக்பர் இப்ராகிம் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மேகநாத ரெட்டி, அகிலேஷ் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ஃபார்முலா-4 ரேசிங் சர்கியூட் என்ற பெயரில் சென்னையில் இரவு நேர தெரு கார் பந்தயம் நடைபெற உள்ளது. நாட்டில் முதல் முறையாக நடைபெற உள்ள இவ்வகை போட்டி ஆக.30, 31 மற்றும் செப்.1 தேதிகளில் நடைபெறும். ஏற்கனவே திட்டமிட்டபடி கடற்கரை சாலை, சிவானந்தா சாலை, கொடிமர சாலை என தீவுத்திடலைச் சுற்றிலும் 3.5 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்கனவே எஸ்டிஏடி, ஆர்பிபிஎல் இடையே 3 ஆண்டுகளுக்கு போட்டியை நடத்துவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2வது சீசனுக்கு தமிழ்நாடு அரசு ஏதும் செலவு செய்யாது. கட்டமைப்பு வசதிகளை செய்துதரும்.

கடந்த ஆண்டு அரசு ஒதுக்கிய ₹40 கோடியில் சுமார் ₹30 கோடியில் சாலை உட்பட பந்தயப்பாதை கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. பிரபல கார்பந்தயங்கள் நடக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ், சிங்கப்பூர் போன்ற நகரங்கள் வரிசையில் சென்னையும் இடம் பிடிக்கும். தமிழ்நாடு அரசின் அபார ஒத்துழைப்பின் காரணமாக பல்வேறு அமைப்புகள் தமிழ்நாட்டில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றன. போட்டியை காண சுமார் 10,000 ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கட்டண விவரம் விரைவில் அறிவிக்கப்படும். இந்தியன் ரேசிங் லீக் என்ற தேசிய அளவிலான போட்டியும், இளம் வீரர்களுக்கான ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப்பும் நடத்தப்படும் (தினமும் மாலை 4.30 - இரவு 9.30).

கொல்கத்தா, அகமதாபாத், ஐதராபாத், டெல்லி, கொச்சி, கோவா, பெங்களூரு, சென்னை என 8 அணிகள் பங்கேற்கின்றன. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போட்டி நடத்தப்படும்.