சென்னை: சென்னையில் பெய்த மழை காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு இயக்கத்தில் தாமதமாகியுள்ளது. விமான நிலைய பகுதியில் பிற்பகல் 3 மணியளவில் பெய்த மழை காரணமாக 17 விமானங்களின் புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெய்த மழை காரணமாக தரையிறங்க முடியாமல் 9 விமானங்கள் அரை மணி நேரமாக வானில் வட்டமடித்தன. சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பெங்களூரு, மதுரையிலிருந்து வந்த இண்டிகோ விமானங்கள் அரைமணி நேரம் வானில் வட்டமடித்தன
கோவை, தூத்துக்குடி, துர்காம்பூர், அந்தமானிலிருந்து வந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சூறைக்காற்று மற்றும் மழை நின்ற பிறகு விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்கள் அரை மணி நேர தாமதத்துக்கு பிறகு புறப்பட்டு சென்றன. மும்பை, கொல்கத்தா, திருச்சி, ராஜமுந்திரி, மதுரை, புனே, கோவை, கவுகாத்தி செல்லும் விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.