Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாத 100 பேரின் பட்டியல் இணையத்தில் வெளியீடு

* விரைவில் ஜப்தி நடவடிக்கை

* அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் சொந்தமாக வீடு வைத்து இருப்பவர்கள், நிலம் வைத்து இருப்பவர்கள் ஆகியோரிடம் மாநகராட்சி சார்பில், சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. இது, மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனமாக உள்ளது. சென்னையில் உள்ள சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரையாண்டுக்கு சுமார் ₹850 கோடி வீதம், ஆண்டுக்கு ₹1,700 கோடி வரை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி மற்றும் அக்டோபர் மாதம் 30ம் தேதிக்குள் 2வது அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் செலுத்தினால் மாநகராட்சி சார்பில் சொத்துவரியில் 5 சதவீதம், அதாவது அதிகபட்சம் ₹5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அரையாண்டுக்கு பிறகு செலுத்தப்படும் சொத்து வரிக்கு ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு சதவீதம் தனிவட்டி அபராதமாக விதிக்கப்படும். கடந்த 2023-24ம் நிதியாண்டில் மாநகராட்சியில் இலக்கை தாண்டி ₹1,800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டை விட ₹227 கோடி அதிகமாகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகளை, தேர்தல் பணிகளுக்கு நடுவே மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.

அதன்படி கடந்த ஏப்.1 முதல் 30ம் தேதி வரை ₹382 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ₹10 கோடி அதிகம். இதுஒருபுறம் இருக்க, சென்னையில் ஏராளமானோர் கோடி கணக்கில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் பாதிப்பதுடன், மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, அனைத்து மண்டலங்களிலும் வார்டு வாரியாக ஆய்வு நடத்தி, அதிக சொத்து வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து வருகிறது. அதையும் மீறி வரி செலுத்தாதவர்களின் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ₹10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்யும் பணியில் ஈடுபட்டது.

இந்த பட்டியலின்படி நீண்ட நாட்களாக வரி செலுத்தாத சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சமீப காலமாக அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி, நீண்ட காலமாக வரி பாக்கி வைத்துள்ள கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ள 100 பேர் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை, மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளவர்களால், மக்களுக்கான வளர்ச்சி பணி பாதிக்கிறது. சிலர் ₹7 லட்சம் முதல் ₹2 கோடி வரை நீண்டகாலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். இதுபோன்ற நீண்ட கால நிலுவை வைத்துள்ளோர் விவரங்களை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.

அதன்படி, நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளவர்களில் அதிகபட்ச நிலுவைத் தொகை அடிப்படையில் முதல் 100 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மொத்தம் ₹22 கோடியே 44 லட்சம் சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர். இவ்வாறு சொத்து வரி நிலுவை வைத்திருப்போரில், முதல் 100 பேர் பட்டியல் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டர்கள் இனிமேலும் சொத்து வரியை செலுத்தாமல் தாமதித்தால், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது தொடர்பான வலுவான விதிகள், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால், சொத்து வரி நிலுவை வைத்திருப்போர் காலத்தோடு சொத்து வரியை செலுத்தி, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்,’’ என்றனர்.

சென்னையில் நீண்ட காலமாக நிலுவை

வைத்துள்ளவர்களில் அதிகபட்ச நிலுவைத் தொகை அடிப்படையில் முதல் 100 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மொத்தம் ₹22 கோடியே 44 லட்சம் சொத்து வரி நிலுவை வைத்துள்ளனர்.

இவர்களின் பெயர் மாநகராட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.