சென்னை: தேசிய நுகர்வோர் நாள் மற்றும் உலக நுகர்வோர் உரிமை நாளினைக் கொண்டாடிடும் பொருட்டு மாநில மற்றும் மாவட்ட அளவிலான நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கல்வி நிறுவனங்களில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் மூலமாக தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த மராத்தான் ஓட்டம் இன்று (15.03.2025) சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இம்மராத்தான் ஓட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட பள்ளி/கல்லூரி மாணவ/மாணவியர்கள் பங்கேற்றனர்.
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற இம்மராத்தான் போட்டியினை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை தீவுத்திடலிலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். ஐந்து கிலோ மீட்டர் தூரம் கொண்ட இம்மராத்தான் போட்டி தீவுத்திடலில் ஆரம்பித்து அண்ணாசாலை, சிவானந்தா சாலை வழியாகச் சென்று திரும்பவும் தீவுத்திடலுக்கு வந்து நிறைவு பெற்றது.
இம்மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ/மாணவியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரால் வழங்கப்பட்டன. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு, மற்றும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் த.மோகன். மற்றும் உயர் அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.