சென்னையில் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை, 100% பேருந்துகள் இயங்குகிறது: போக்குவரத்து துறை தகவல்
சென்னை: சென்னையில் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை, 100% பேருந்துகள் இயங்குகிறது என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையின் 32 பணிமனைகளில் இருந்து 650க்கும் மேற்பட்ட வழித்தடங்களுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு மற்றும் வங்கி துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது, அபாயகரமான தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில், தொழிற்சாலைகளில் ஆம்புலன்ஸ் வசதி, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், பொதுத்துறை பங்குகளை விற்காதே என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம் நடக்கிறது.
நாடு தழுவிய போராட்டத்திற்கு இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் சிஐடியு, தொமுச, ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இதையடுத்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கக் கூடாது. மீறிப் பங்கேற்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, 'நோ வொர்க் நோ பே' என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படாது என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் இந்நிலையில் சென்னையில் 100 சதவீதம் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 32 பணிமனைகளில் இருந்து வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், 650-க்கு மேற்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை.
ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணியில் உள்ளனர். பேருந்துகள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.