சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை மீண்டும் அதிகரிப்பு: ஷிப்ட் முறையில் தடியுடன் 2 பாதுகாவலர்கள் நியமனம்
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றி அலைந்து பயணிகளுக்கு பெரும் தொல்லைகள் கொடுத்து வந்தன. இது குறித்து பயணிகளிடம் இருந்து ஏராளமான புகார்கள் சென்னை விமான நிலைய நிர்வாகத்திற்கு வந்தன. இதையடுத்து சென்னை விமான நிலைய நிர்வாகம், கடந்த ஆண்டில் ப்ளூ கிராஸ் மற்றும் விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றி அலைந்த சுமார் 40க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்து, இனவிருத்தி தடை அறுவை சிகிச்சை செய்து, நாய் கடி விஷம் முறிவு ஊசிகளை நாய்களுக்கு போட்டனர்.
அதன்பின்பு ஓரளவு விமான நிலையத்தில் நாய்கள் நடமாட்டம் குறைந்து இருந்தது. ஆனால், சமீப காலமாக, சென்னை விமான நிலைய உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் உள்பட விமான நிலையம் வளாகம் முழுவதும் தெரு நாய்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்ததோடு, நாய்கள் அட்டகாசங்களும் அதிகரித்துள்ளன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்களை ஓட ஓட விரட்டுகின்றன.
இதனால் பாதிக்கப்படுவது பயணிகள் மட்டுமின்றி, விமான நிலைய ஊழியர்கள், விமான நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் உள்பட பலரும்தான். இதுகுறித்து விமான பயணிகள், விமான நிலையங்களில் தெரு நாய்கள் சுற்றி அலைவதை போட்டோக்கள் எடுத்து, சமூக வலைதளம் மூலம், சென்னை விமான நிலைய அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்கையில், உள்ளாட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து அவர்கள் மூலம், சென்னை விமான நிலையத்திற்குள் சுற்றும் நாய்களை அவ்வப்போது பிடிக்கும் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அதை மேலும் தீவிரப்பட்டோம் என்று பதில் பதிவிட்டுள்ளனர். இதற்கிடையே சர்வதேச விமான நிலையத்தில் நாய்கள் அட்டகாசம் பெருமளவு அதிகரித்து, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புக்கும் பிரச்னைகள் ஏற்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரும்போது நாய்கள் ஓடி வந்து, குறுக்கீடுகள் செய்யாமல் இருப்பதற்காக, பெரிய தடிகளுடன், இரண்டு பாதுகாவலர்களை விமான நிலைய அதிகாரிகள் புதிதாக நியமித்துள்ளனர். அவர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி விமான நிலையத்திற்குள் சுற்றும் நாய்களை அடித்து விரட்டுகின்றனர்.
* நிரந்தர நடவடிக்கை தேவை
நாய்கள் தொல்லை குறித்து பயணிகள் தரப்பில் கூறும்போது, ‘‘சென்னை சர்வதேச விமான நிலையம் மிகவும் பாதுகாப்பு வளையத்திற்குள் வரக்கூடியது. இந்த விமான நிலையத்தில் இதை போல் நாய்கள் பிரச்னைகள் தொடர்ந்து இருப்பதும், இதனால் பயணிகள், ஊழியர்கள், காவலர்கள் உள்பட பல தரப்பினர் பாதிக்கப்படுவதும் சரியானது இல்லை. எனவே விமான நிலைய அதிகாரிகள் இந்த நாய்களை நிரந்தரமாக, சென்னை விமான நிலைய பகுதிக்குள் வரவிடாமல் தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விமான நிலையத்தில் நாய்கள் அவ்வப்போது ஒன்றோடு ஒன்று சண்டை இடுகின்றன. அப்போது பயணிகளும், ஊழியர்களும் பயந்து அலறிக் கொண்டு ஓடும் நிலை ஏற்படுகிறது. பயணிகள் யாரையாவது நாய் கடித்து விட்டால், அது பெரும் பிரச்னையை ஏற்படுத்தி விடும். எனவே அதுபோன்ற சூழ்நிலைகளுக்கு முன்பு, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்றனர்.