Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நடிகர் கருணாஸ் கைப்பையில் இருந்த 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்: பயணம் ரத்து

சென்னை: சென்னை விமான நிலையத்தில் திரைப்பட நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட தயாராகி கொண்டிருந்தது. விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது பிரபல திரைப்பட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் இந்த விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக வந்திருந்தார். அவருடைய கைப்பையை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். அப்போது அந்த கைப்பையில் வெடிபொருள் இருப்பதற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த கைப்பை தனியே எடுத்து வைத்து விட்டு கருணாஸிடம் விசாரித்தனர்.

ஆனால் கருணாஸ் அந்த கைப்பையில் ஆட்சேபகரமான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறினார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பையை திறந்து பார்த்தபோது, அதனுள் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. அவை அனைத்தும் கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய .32 எம்எம் ரக குண்டுகள் ஆகும். உடனடியாக துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, கருணாஸிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கருணாஸ், நான் துப்பாக்கி லைசென்ஸ் ஹோல்டர், என்னிடம் உள்ள கைத்துப்பாக்கியில் பயன்படுத்துவதற்கான குண்டுகள் இவை. விமானத்தில் குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்று விதி இருப்பது எனக்கு தெரியும். ஆனால் நான் அவசரமாக புறப்பட்டு வந்ததால் பையில் இருந்த துப்பாக்கி குண்டுகளை கவனிக்கவில்லை என்று கூறினார். அதோடு தனது துப்பாக்கி லைசென்ஸ், அதனை புதுப்பித்த ஆவணங்கள் போன்றவைகளையும் காட்டினார்.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கைத் துப்பாக்கியை தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டதாகவும், அந்த கைத் துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய 40 லைவ் குண்டுகள் மட்டும் தவறுதலாக கைப்பையில் இருந்து விட்டது என்று கூறினார். மேலும் கைத்துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்கான ஆவணங்களையும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் காட்டினார். பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு விதிமுறைகளின் படி துப்பாக்கி குண்டுகளை விமானத்தில் எடுத்துச் செல்வது தவறு.

எனவே உங்களை இந்த விமானத்தில் பயணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கருணாஸின் திருச்சி பயணத்தை ரத்து செய்தனர். மேலும் விசாரணையில், ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் அவரிடம் இனிமேல் இதுபோல் விமான சட்ட விதிகளுக்கு மாறாக துப்பாக்கி குண்டுகளை கொண்டு வராதீர்கள் என்று அறிவுறுத்திவிட்டு, பறிமுதல் செய்த துப்பாக்கி குண்டுகளை மீண்டும் கருணாஸிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் காரணமாக விமானம் சுமார் அரை மணி நேரம் தாமதமாக திருச்சிக்கு புறப்பட்டு சென்றது. இதையடுத்து நடிகர் கருணாஸ், தன் காரிலேயே திருச்சிக்கு புறப்பட்டு செல்வதாக கூறிவிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.