சென்னை: சென்னையில் 86% பேர் சொந்த வீடு வாங்க விரும்புவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சென்னையில் வீட்டு விலை கடுமையாக உயர்ந்திருப்பதால், முதல் முறையாக வீடு வாங்க நினைப்பவர்கள் புறநகர் பகுதிகளுக்கு திரும்பி வருகின்றனர். விலை குறைவு, மெட்ரோ ரயில் வசதி, வேலை வாய்ப்பு மையங்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
அண்ணாநகரில் ஒரு சதுர அடிக்கு ரூ.12,500 முதல் 16,000 வரை கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில், கூடுவாஞ்சேரி, தாம்பரம், ஆவடி போன்ற இடங்களில் பாதி விலைக்கும் குறைவாக வீடு கிடைக்கிறது. சென்னையின் மையப்பகுதியில் ஒரு சிறிய 1 பிஎச்கே வீட்டின் விலையில் புறநகரில் 2 அல்லது 3 பிஎச்கே பெரிய வீடு வாங்க முடியும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
118.9 கிலோமீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் புறநகர் பகுதிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை செல்லும் இந்த பாதை பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் பகுதிகளை இணைக்கிறது. மேலும் ஜிஎஸ்டி சாலை, வெளிவட்ட சாலை ஆகியவற்றின் மேம்பாடு பயண நேரத்தை கணிசமாக குறைத்துள்ளதால் சென்னைக்கு வெளியே வீடு வாங்க விருப்பப்படுகின்றனர்.
குறிப்பாக சிறுசேரி, கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் ஐடி மற்றும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால், அங்கு வசிப்பது வேலைக்கு செல்பவர்களுக்கு வசதியாக இருக்கிறது. மேடவாக்கம், பூந்தமல்லி, குன்றத்தூர், திருமுடிவாக்கம், கோவிலாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வாங்குவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பு கிடைப்பதால், தூர பயணம் என்பது இனி பெரிய தடையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் உள்ள திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வாடகை வருமானமும் நல்ல முறையில் கிடைப்பதால், முதலீட்டு நோக்கிலும் புறநகர் பகுதிகள் கவர்ச்சிகரமாக மாறி வருகின்றன. சென்னையில் 86% மக்கள் சொந்த வீடு வாங்க விரும்புவதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையாகும்.


