Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விரிவுபடுத்தப்பட்ட பாஸ்ட் டிராக் திட்டம்: டெர்மினல் 4ல் அமலுக்கு வந்தது

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பாஸ்ட் டிராக் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு டெர்மினல் 4ல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 4லிருந்து புறப்படும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்களின் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் தற்போது பாஸ்ட் டிராக் எனப்படும், self package drop (SBD) என்ற புதிய திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான பயணிகள், தங்களுடைய உடமைகளை தாங்களே தானியங்கி எந்திரங்கள் மூலம் ஸ்கேன் செய்து பரிசோதித்து, கண்வேயர் பெல்ட் மூலம் விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், புறப்பாடு பகுதி டெர்மினல் 4ல், 8 பாதுகாப்பு சோதனை தானியங்கி கவுன்ட்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுன்ட்டர்களில் ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எந்திரங்கள் மட்டும் இருக்கும்.

பயணிகள் அந்த எந்திரத்தில் தங்களுடைய உடமைகளை வைத்துவிட்டு, தங்களின் பயண டிக்கெட்டின் பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். தானியங்கி முறையில், பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வரும். பயணி அந்த போர்டிங் பாஸை எடுத்து, அங்குள்ள மற்றொரு எந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும். உடனடியாக அந்த உடமைகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள், எந்திரத்தின் டிஸ்ப்ளேவில் தெரியும். அதைப் பார்த்துவிட்டு பயணி, அந்த எந்திரத்தில் உள்ள பட்டன் மூலம் ஓகே கொடுக்க வேண்டும். அதோடு, தான் எடுத்துச் செல்லும் உடமைகளின் எண்ணிக்கை குறித்தும் பதிவு செய்ய வேண்டும். அந்த தானியங்கி எந்திரம், பயணியின் உடமைகளின் எடையை ஸ்கிரீனில் காட்டும்.

இதையடுத்து பயணிகள் உடமைகளில் ஒட்டுவதற்கான டேக்குகள் எந்திரத்தில் இருந்து வெளியே வரும். பயணி அந்த டேக்குகளை எடுத்து தங்கள் உடமைகளில் ஒட்டுவதோடு, அதன்பின்பு உடமைகளை அருகே உள்ள கன்வேயர் பெல்ட்டில் வைத்துவிட்டால், பயணியின் உடமைகள் விமானத்தில் ஏற்றுவதற்கு தானாகவே கொண்டு செல்லப்படும்.

இந்த புதிய முறை மூலம், பயணிகள் போர்டிங் பாஸ் வாங்குவது மற்றும் தங்கள் உடமைகளை பாதுகாப்பு சோதனைகள் நடத்தி விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைப்பது போன்றவற்றிற்காக நீண்ட வரிசையில், நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அதிவேகமாக அப்பணிகளை முடித்துவிட்டு, பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு தயாராகி விடலாம். இந்த புதிய திட்டத்திற்கு பாஸ்ட் டிராக் செல்ப் பேக்கேஜ் ட்ராப்ட் (எஸ்பிடி) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் டெர்மினல் 4 உள்நாட்டு முனையத்தில், தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு மட்டும் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டிருந்தாலும், அடுத்த சில தினங்களில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்துக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த அதிநவீன திட்டம் ஏற்கனவே சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் 1 புறப்பாடு பகுதியில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு கடந்த ஏப்ரல் 11ம் தேதியில் இருந்து அமலில் இருந்து வருகிறது.