செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நேற்று நள்ளிரவு 137வது தசரா விழா துவங்கியது. இது மைசூர் மற்றும் குலசேகரப்பட்டினத்திற்கு அடுத்து செங்கல்பட்டு விழா 3வது இடமாகும். விழா துவங்கியநிலையில், மக்கள் ஆர்வத்துடன் குடும்பத்தோடு கணவன், மனைவி, குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்பட தசராவை காண அனைவரும் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
இதில், தசரா துவங்குவதாக திட்டமிட்டு அதற்கான அனுமதியை நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. ஆனால், இன்னும் முறையாக மின்விளக்குள் அமைக்கப் படவில்லை. மின்விளக்கு இல்லாததால் பெரும்பாலான கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்வுகள் எதுவும் அமைக்கப்படவில்லை. தசராவிழாவின் முதல்நாளான நேற்று போதுமான வெளிச்சம் இல்லாததாலும், முக்கியமான சில கடைகள் திறக்கப்படவில்லை.
இந்த விழாவை, ஆய்வு செய்தபிறகு செங்கல்பட்டு கோட்டாட்சியர் நாராயண சர்மா புது கட்டுப்பாட்டை விதித்துள்ளார். எனவே, தசராவில் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமே ராட்டினங்கள்தான். சாதாரண ராட்டினங்கள் முதல் ராட்சத ராட்டினங்கள் என சுமார் 20க்கும் மேற்பட்ட விதவிதமான ராட்டினங்கள் தயார் நிலையில் உள்ளன. முறையாக சான்றிதழ் பெறாததால் இந்தாண்டு துவக்க நாளே ராட்டினங்கள் இயக்க மாவட்டம் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
எனவே, குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். முறையான சான்றிதழ் பெறவில்லை என்றால் வரும் நாட்களில் ராட்டினங்கள் இயங்குவதற்கு வாய்ப்பில்லை என்றே செங்கல்பட்டு காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.