கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன ஸ்பிரே தெளிக்கப்பட்டு வாழைத்தார்கள் பழுக்க வைப்பு: நடவடிக்கை எடுக்கப்படுமா?
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழம், பூ மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுக்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் ரசாயன ஸ்பிரே மூலம் பழங்களை பழுக்கவைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது;
கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைத்தார்களை பழுக்கவைக்க ரசாயன ஸ்பிரே அடிக்கின்றனர்.இயற்கையான முறையில் பழுக்கவைக்க வேண்டும். ஆனால் பழங்களை பழுக்கவைக்க ‘எத்தனால்’ என்ற வேதிப்பொருளை பயன்படுத்துகின்றனர். இது மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். மீறி ரசாயன ஸ்பிரே செய்தால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிப்போம் என்று தெரிவித்தபோது அதுபற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே, இதனை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஸ்பிரே மூலம் வாழைத்தார்களை பழுக்கவைத்து விற்பனை செய்யப்படுவதாக அங்காடி நிர்வாகம் அலுவலகத்தில் புகார் அளித்தபோது முதன்மை அலுவலர் இந்துமதி ஆய்வு செய்து பழங்களுக்கு ஸ்பிரே அடிக்கும் கடையின் உரிமையாளரை எச்சரித்து ஒரு கடைக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்தார். இதனால் ஸ்பிரே மூலம் பழுக்கவைப்பது தடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஸ்பிரே மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். இந்த நிலையில், நாளை காலை 11 மணி அளவில், உணவு தானிய மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் பழ வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.