குன்றத்தூர்: செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியநிலையில், பூண்டி ஏரி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஏரி முழு கொள்ளளவு எட்டியதால் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஏரியை கண்காணித்து வருகின்றனர். சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்கிறது. இங்கிருந்து, தினந்தோறும் தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு, சென்னை மக்களின் தாகம் தீர்ப்பதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அனுப்பப்பட்டு வருகிறது.
மழைக்காலத்தில் ஏரியில் உபரி நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நீர்மட்டம் உயர்ந்து காணப்படுவது இயல்பு. ஆனால், தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையிலும் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதற்கு, முக்கிய காரணம் பூண்டி ஏரி நிரம்பியதால் அங்கிருந்து தினந்தோறும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.
நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியில், 23.50 அடி உயரமும், மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில், தற்போது 3,500 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் உள்ளது. கோடையிலும் தற்போது செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவு நோக்கி சென்று கொண்டிருப்பதால், பூண்டி ஏரியில் இருந்து வரக்கூடிய நீரும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஏரியின் நிலவரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கோடையிலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. வழக்கமாக கோடையில் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறையத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கோடையிலும் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருவது செம்பரம்பாக்கம் ஏரியின் குடிநீரை மட்டுமே நம்பி வாழ்வாதாரம் நடத்திக் கொண்டிருக்கும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதி மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


