Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நச்னு நாலு கேள்வி: கவர்ச்சிகரமான பொய்களை சொல்லி ஸ்டண்ட் அடிக்கும் அண்ணாமலை

1 பாஜ வேட்பாளர்களை குறி வைத்து உங்கள் பிரசாரம் தொடர்கிறதே ஏன்?

10 ஆண்டுகளாக நாட்டை நாசம் செய்தனர். தமிழ்நாட்டுக்கு மோசம் செய்தனர். அதனால் நாங்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காக பாஜவுக்கு எதிராக பிரசாரம் செய்கிறோம். 10 ஆண்டுகளாக பாஜ கொண்டு வந்த மோசமான சட்டங்கள், திட்டங்கள், தமிழ்நாட்டை கண்டு கொள்ளாமல் அவர்கள் விடுத்த நெருக்கடிகள், மழை வெள்ளத்தின் போது எந்த உதவியும் செய்யாதது, மத கலவரத்தை உருவாக்கியது. குஜராத்தி மார்வாடிகளை முன்னிறுத்தியது, தமிழ்நாட்டு வணிகத்தை நசுக்கியது, ஜிஎஸ்டி வரியை போட்டு கொடுமைபடுத்தியது இதை தான் எங்கள் பிரசாரத்தில் முன்னிலைப்படுத்துவோம்.

2மே 17 இயக்கத்தினரை பிரசாரம் செய்ய விடாமல் பாஜவினர் மிரட்டுவது உள்ளிட்ட அடாவடியில் ஈடுபடுகிறார்களே?

பாஜவின் மக்கள் விரோதப்போக்கை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் கேட்ட கேள்வி எதற்குமே அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. மோடி தமிழ்நாட்டுக்கு பல முறை வந்திருக்கிறார். விலைவாசியை குறைப்போம் என்று ஏதாவது சொன்னாரா? பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைப்பேன் என்று சொன்னாரா? எதையும் சொல்லவில்லை. அதற்கு பதில் சொல்ல சொல்லி கேட்கிறோம். இதுவரை பதில் சொல்ல முடியவில்லை. எதற்குமே பதில் சொல்ல முடியாததால் கலவரம் செய்கிறார்கள். உண்மையை மூடி மறைக்காமல் நாங்கள் பளிச்சென்று சொல்லி விடுகிறோம். அவர்களின் உண்மை முகமூடி அம்பலமாவதால் கலவரம் செய்து எங்கள் வாயை அடைக்க முயற்சிக்கிறார்கள்.

3இடஒதுக்கீட்டை பறித்த மோடியை கண்டித்து பாமக போராட்டம் நடத்தாதது ஏன் என்று கேள்வியை எழுப்பியிருக்கிறீர்களே?

தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. ஓபிசி பிரிவில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், வன்னியர் சமூக இளைஞர்களும் வருகின்றனர். இந்த இளஞைர்களுக்கான கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, மருத்துவ படிப்பு இவைகளை தட்டிப் பறித்து மேல் தட்டு மக்களுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இதை எதிர்த்து திருமாவளவன் தான் போராட்டம் நடத்தியுள்ளார். பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே என்ன நியாயம்? நெய்வேலி என்எல்சியில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜ்யசபாவில் அன்புமணி பேசினாரா? கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் மட்டும் போதாது.

4 அண்ணாமலையின் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

அவருக்கு எந்த பெரிய ஆதரவும் கிடையாது. விடலை பசங்கன்னு சொல்லுவாங்க. அது போன்றவர் தான் அண்ணாமலை. அரசியல் விபரங்கள் எதுவும் அவருக்கு தெரியாது. கவர்ச்சிகரமான பல பொய்களை சொல்கிறார். 15 வயதில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு விபரங்கள் எதுவும் தெரியாததால், அண்ணாமலையை பார்க்கும் போது வித்தியாசமாக பார்க்கின்றனர். எல்லாரிடமும் கேள்வி கேட்பது போன்றும், அதற்கு உணர்ச்சிகரமாக உண்மைையை சொல்வது போன்றும் சிறு வயது இளைஞர்களை ஏமாற்ற ஸ்டண்ட் அடிக்கிறார். ஜிஎஸ்டியால் கோவையில் சிறு தொழில்கள் எல்லாம் நசுங்கி போனது, பணமிழப்பு நடவடிக்கையால் தொழில்கள் முடக்கப்பட்டது. அது குறித்து அவர் இதுவரை பேசவில்லை. சிறு, குறு தொழில்களுக்கான கடன் தள்ளுபடி கேட்டு வருகின்றனர். அதற்கும் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. இதனால் அண்ணாமலையின் பிரசாரம் இவர்கள் மத்தியில் எடுபடாது.