Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது.! மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

மதுரை: எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில் உள்ளது என மதுரையில் ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சுயேட்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், இந்த தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பது பற்றிய தேர்தல் என்றார். மேலும், பாரதிய ஜனதா கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும், பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். என்னை பொறுத்தவரை பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். இன்றைய காலகட்டத்தில் நாட்டில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு குழு செயல்பட்டு வருகிறது. நான் மத்திய அமைச்சராக வருவது இறைவன் கையில் தான் உள்ளது. அரசியல் நடப்பை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன் என்றும் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.