Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வங்கக் கடலில் இரு வளிமண்டல காற்று சுழற்சி; 3 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளி மண்டல சுழற்சிகள் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை அல்லது ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளி மண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று மதியத்தில் இருந்து தமிழகத்தில் மழை பெய்யத் தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள், புழல், செங்குன்றம் பகுதிகள், கூடுவாஞ்சேரி, திருப்போரூர், ஓஎம்ஆர் இசிஆர் சாலை, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகள், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, குன்றத்தூர் பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

கரூரில் தூறல் மழை பெய்தது. வேலூர், திருத்தணி, சேலம் மாவட்டம் கிழக்கு, கல்வராயன் மலைப்பகுதி, கிருஷ்ணகிரி, நீலகிரி மேற்கு, தேனி மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதி, தென் மாவட்டத்தில் விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதலே நல்ல பெய்யத் தொடங்கியது. வடமேற்கு வெப்ப நீராவி நீலகிரி மாவட்டம், பெங்களூர், வயநாடு, குடகு வழியாக தமிழகத்துக்குள் நுழைந்ததன் காரணமாக சேலம், கோவை மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியது. கேரள எல்லையோரம் மற்றும் அரபிக் கடல் வழியாக வரும் காற்று மூணாறு வழியாக வருவதால், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லையிலும் மழை பெய்தது.

பின்னர் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் மாலையில் பெய்தது. டெல்டாவில் தெற்கு திசை காற்று கூடுதலாக இருந்ததால் நள்ளிரவில், அதிகாலையில் நல்ல மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, இரு காற்றின் இணைவு இன்று பலமாக இருக்கும் என்பதால், இன்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளில் மேலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் 21ம் தேதி ஒரு வளி மண்டல கிழடுக்கு சுழற்சி உருவாகும். அதன் தொடர்ச்சியாக 22ம் தேதி அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளது. அது பிறகு வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும். தென்மேற்கு பருவ மழையை பொருத்தவரையில் இன்று (19ம்தேதி) தெற்கு அரபிக் கடல் மற்றும் மாலத்தீவு வரை பரவியுள்ளது. மேலும் குமரிக்கடலில் பிற பகுதிகள், வங்கக் கடலில் சில பகுதிகளுக்கும் அது பரவும்.

வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது. கனமழை எச்சரிக்கை என்பது கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். மேலும், 20ம் தேதியில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்ைட, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இரண்டு நாட்களுக்கு வெப்பம் குறைவாக இருந்தாலும் அதற்கு பிறகு வெப்ப நிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரிக்கும்.

கோடை மழை என்று பார்த்தால் மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையில் 192.7 மிமீ பெய்துள்ளது. இது இயல்பு நிலையைவிட 101.4 மிமீ சராசரியை விட 90 அதிகம். கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 30ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே மே 27ம் தேதியே பருவமழை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சில நாட்கள் கழித்து தமிழக பகுதியிலும் மழை பெய்யத் தொடங்கும். பெய்யத் தொடங்கிய பிறகு தான் மழையின் அளவு எவ்வளவு என்பதை அளவிட முடியும். இவ்வாறு அமுதா தெரிவித்தார்.

தமிழகத்தில் கோடை மழை 73% கூடுதலாக பெய்துள்ளது

கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை பெய்த கோடை மழையின் நிலவரம்: தமிழகத்தில் கோடை காலத்தில் பெய்துள்ள மழை தற்போது அக்னி நட்சத்திரத்தின் வெப்பத்தை குறைத்துள்ளது. இந்த அக்னி நட்சத்திர காலத்தில் மார்ச் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பெய்த மழையில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயல்பைவிட 238 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் 190 சதவீதம் அதிகம், அரியலூர் மாவட்டம் 185 சதவீதம் அதிகம், காரைக்கால் 175, மயிலாடுதுறை 147, நாகப்பட்டினம் 125, திருநெல்வேலி 131, தஞ்சாவூர் 127 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

குறைந்த பட்சமாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 9 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக மார்ச் 1ம் தேதி முதல் மே 18ம் தேதி வரையில் தமிழகத்தில் இயல்பாக 99 சதவீதம் பெய்ய வேண்டும். ஆனால், கூடுதலாக 73 சதவீதம் பெய்துள்ளது.