Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாமல்லபுரம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை: தவெக தலைவர் விஜய் வழங்கினார்

* போலீசாரின் அறிவுறுத்தலை மதிக்காத பவுன்சர்கள்

* இசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள ஒரு பிரபல தனியார் விடுதியில் இன்று காலை தமிழக வெற்றி கழகம் சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் 88 சட்டமன்றத் தொகுதியில் முதல் 3 இடங்களைப் பிடித்த தலா 3 பேர் வீதம் மொத்தம் 250க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக முன்கூட்டியே தமிழக வெற்றி கழகம் சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்து சான்றிதழ் பெறும் மாணவ-மாணவிகளுக்கு உரிய அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அழைப்பிதழுடன் வரும் மாணவர் மற்றும் அவரது பெற்றோருக்கு மட்டும் இன்று காலை விழா அரங்குக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தனியார் பேருந்துகள் மற்றும் கார்களில் வந்து குவிந்தனர்.

அப்போது விழா அரங்கின் நுழைவு வாயில் பகுதியில் இருந்த பவுன்சர்கள், இசிஆர் சாலையிலேயே அனைத்து வாகனங்களையும் நிறுத்தி பரிசோதித்து, அழைப்பிதழுடன் வரும் வாகனங்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் இசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதுகுறித்து சட்டம்-ஒழுங்கு மற்றும் டிராபிக் போலீசார், பவுன்சர்களிடம் ‘நீங்கள் அரங்கின் நுழைவு பகுதியில் சோதனை செய்து வாகனங்களை உள்ளே அனுப்புங்கள். இசிஆர் சாலையிலேயே சோதனை செய்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது’ என்று தெரிவித்தனர். எனினும், போலீசாரின் அறிவுறுத்தலை பவுன்சர்கள் மதிக்காமல் தங்களின் பணியைத் தொடர்ந்தனர். இதனால் போலீசாருக்கும் பவுன்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பவுன்சர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் காலை 9.10 மணியளவில் கார்கள் புடைசூழ விழா அரங்குக்கு வந்தார். 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த 250க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தவெகவின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் விஜய் பேசும்போது, ‘‘தேர்தலில் பணம் கொடுத்தாலும் என்ன செய்ய வேண்டாம் என்பது உங்களுக்குத் தெரியும். தேர்தலுக்கு பணம் வாங்காதீர்கள்.

சாதி மதத்தை ஒதுக்கி வையுங்கள். விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை விற்கும்போது சாதி மதம் பார்ப்பதில்லை. சமீபத்தில் தந்தை பெரியாருக்கே சாதிச் சாயம் பூச முயற்சி நடந்தது . அண்மையில் நடந்த மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வில் தந்தை பெரியாருக்கு சாதிய சாயம் பூசுவது போன்று ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பறவையைப் போல் சுதந்திரமாக, தைரியமாக, நம்பிக்கையுடன் பறக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்த வாரம் உங்களை இரண்டவது கட்டமாக சந்திக்கிறேன் என்றார்.