Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலம்; கிஸ்கேம் சர்ச்சையில் சிக்கிய சிஇஓ: பெண் ஹெச்ஆர்வுடன் ஓட்டம்

பாஸ்டன்: ‘கிஸ் கேம்’-ல் நேரலையில் நெருக்கமாக இருந்த தலைமை செயல் அதிகாரி - பெண் ஹெச்ஆர்வுடன் தொடர்பான வீடியோ கார்ப்பரேட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பிரபல இசைக்குழுவான ‘கோல்ட்பிளே’ இசை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில், விளையாட்டுப் போட்டிகளில் ’கிஸ் கேம்’ என்ற கேமரா வைக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் போட்டியின் போது நெருக்கமாக இருக்கும் தம்பதிகளை இந்த கேமரா படம்பிடித்து பெரிய திரையில் காட்டும். அதை பார்க்கும் பார்வையாளர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்துவர்.

‘கிஸ் கேம்’ தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பிரபலம். மசாசூசெட்ஸ் நிகழ்ச்சியை கண்காணித்து வந்த ‘கிஸ் கேம்’ கேமரா, நடுத்தர வயது ஜோடி நெருக்கமாக நின்று கொண்டிருப்பதை பெரிய திரையில் காட்டியது. உடனடியாக இதை கவனித்த இருவரும் வெட்கப்பட்டு பிரிந்து சென்று கீழே குனிந்து கொண்டனர். இதனைக் கண்ட சுற்றி இருந்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் உலக அளவில் வைரலாகி விட்டது. அந்த கேமராவில் சிக்கியது பிரபல மென்பொருள் நிறுவனமான ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி பைரான், அதே நிறுவனத்தின் ஹெச்ஆர் அதிகாரி கிறிஸ்டின் கேபோட் என்பது தெரிய வந்துள்ளது.

ஆண்டி பைரான் - மேகன் பைரான் இருவரும் நியூயார்க் நகரத்தில் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த கிஸ் கேம் சர்ச்சைக்குப் பிறகு மேகன் தனது பேஸ்புக் பக்கத்தில் தன் பெயரில் இருந்த பைரானின் பெயரை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் டீ-ஆக்டிவேட் செய்துவிட்டதாகவும் தெரிகிறது.

ஒரே ஒரு வீடியோவால் என்வாழ்க்கையே போச்சு...

கிஸ்கேமில் சிக்கியது குறித்து ஆண்டி பைரான் கூறுகையில்,’ இசையும் மகிழ்ச்சியும் நிறைந்த இரவாக இருக்க வேண்டிய நிகழ்வு, பொது மேடையில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆழமான தனிப்பட்ட தவறாக மாறிவிட்டது. என் மனைவி, என் குடும்பத்தினர் மற்றும் ஆஸ்ட்ரோனமர் குழுவினரிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு கணவனாக, ஒரு தந்தையாக, ஒரு தலைவராக நீங்கள் என்னிடமிருந்து சிறந்ததைப் பெற வேண்டும். ஒரு தனிப்பட்ட தருணமாக இருந்திருக்க வேண்டிய நிகழ்வு எனது அனுமதியின்றி பகிரங்கமானது எவ்வளவு கவலையளிக்கிறது என்பதையும் நான் வெளிப்படுத்த விரும்புகிறேன். நான் கலைஞர்களை மதிக்கிறேன், ஆனால் வேறொருவரின் வாழ்க்கையை காட்சியாக மாற்றுவதன் தாக்கத்தைப் பற்றி நாம் அனைவரும் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.