Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடியில் அமைக்கப்பட்ட சென்னை புத்தகப் பூங்கா திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் ரூ.1.85 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். புத்தகப் பூங்காவில் பல்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்படும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள உயர்கல்வி பாடநூல்கள், இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமை நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் மற்றும் பள்ளிப் பாடநூல்கள் ஆகியவை கிடைக்கும்.

இந்நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் திசைதோறும் திராவிடம், முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம், இளந்தளிர் இலக்கியத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட 84 நூல்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விப் பணியிலும் தமிழ்ப் பணியிலும் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நூல்களை வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் எளிதில் வாங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இணைய வழி விற்பனைக்கான மின்வணிக இணையதள வசதியையும் (www.tntextbooksonline.com) முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுதவிர பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், 821 பொது நூலகங்களுக்கு கூடுதல் கட்டிடம் கட்டுதல், தேவையான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், கணினி தொடர்புடைய சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு சிறப்பு நிதியுதவியாக 213 கோடியே 46 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில் ஒரு நூலகக் கட்டிடம் 500 சதுர அடி பரப்பளவில் என 821 பொது நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 352 நூலகக் கட்டிடங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் ரூ.24 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டிடங்கள், ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நூல்கள், ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்பிலான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி தொடர்புடைய சாதனங்கள், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.70 லட்சம் ரூபாய் செலவில் 1050 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள முழுநேர கிளை நூலக புதிய கட்டிடம் மற்றும் பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 49.78 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 70 சிறப்பு நூலகங்கள் என மொத்தம் ரூ.29.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நூலகங்கள் மற்றும் நூலகக் கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

* அறிவை பரிமாறிக்கொள்ள புத்தக பூங்கா

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: இனி, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்தித்துக்கொள்ளும் உறவுகளும் நட்புகளும், அன்பை பரிமாறிக்கொள்வதை போல, புத்தகங்களை கொண்டு அறிவை பரிமாறிக்கொள்ள சென்னை புத்தக பூங்காவை ெதாடங்கியுள்ளோம். சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது (வாழ்க்கை) பயணங்களில் துணையாகட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.