Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக காங். போராட தயார்: செல்வபெருந்தகை பேட்டி

கிருஷ்ணகிரி: காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து, தமிழக காங்கிரஸ் போராட தயாராக உள்ளதாக செல்வபெருந்தகை தெரிவித்தார். கிருஷ்ணகிரி அடுத்த கல்லுகுறிக்கி கிராமத்தில் நடந்த காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ., நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனி நபர்களை தாக்கி பேசுவது பாஜவினருக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். குறிப்பாக, வடமாநிலங்களில் தனிநபர்களை தாக்கி பேசுவது அதிகளவில் நடைபெறும். தமிழகத்தில் தற்போதுதான் அதனை தொடங்கி உள்ளனர். தனி நபர்களை தாக்கிப் பேசுவது மட்டும் அல்லாமல், ஆட்களை வைத்து தாக்கவும் செய்வார்கள். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கருணாநிதி, தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

காமராஜரை தொடர்ந்து கருணாநிதிதான் பொன் எழுத்துக்களால் எழுதக்கூடிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தி வருவதை, ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசும் போதை பொருட்கள் நடமாட்டத்தை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை பெற்றுத்தர, கர்நாடகா அரசை கண்டித்து, தமிழக காங்கிரஸ் காந்திய வழியில் போராட தயாராக உள்ளது. அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரசை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.