Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையில் நெஞ்சை உலுக்கிய தாய்பாசம் தாய்மையின் தவிப்பை கண்முன் நிறுத்திய பசு

*சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

நெல்லை : மனிதர்களிடம் மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களுக்கும் தாய்மை உணர்வு என்பது எவ்வளவு ஆழமானது என்பதை நெல்லை சந்திப்பு பகுதியில் ஒரு பசுவின் பரிதவிப்பு உணர்த்தியது. பைக்கை துரத்தயபடி பசு ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தாய் பாசம்...இந்த சொற்களில் அடங்கியுள்ள ஆழமான உணர்வு, உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. மனிதர்கள் முதல் மற்ற ஜீவராசிகள் வரை, தன் சந்ததிக்காக எதையும் செய்யத்துணிவது தாய்மையின் இயல்பு. அது நிபந்தனையற்றது. பிறக்கும்போதே பிள்ளைகளிடம் ஒருவிதப்பாசமும், பாதுகாக்கும் உணர்வும் தாய்க்கு வந்துவிடுகிறது.

வேறெந்த உறவும் ஈடு செய்ய முடியாத இந்த தாய் பாசத்தின் வலிமையை எடுத்துரைக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நெல்லை சந்திப்பில் நேற்று முன்தினம் அரங்கேறியது. அன்று இரவு தாய் பசு ஓரு அழகிய கன்றுக்குட்டியை நெல்லை சந்திப்பு பகுதியில் ஈன்றது.

அடுத்த சில வினாடிகளில் மாட்டின் உரிமையாளர் கன்றை பாதுகாப்பு கருதி பைக்கில் ஏற்றிக்கொண்டு செல்லத்தொடங்கினார். பச்சிளம் கன்றுக்குட்டியை பிரிய மனம் இல்லாத அந்த தாய் பசு, தன் கன்றை தொடர்ந்து பைக்கின் பின்னாலேயே ஓட ஆரம்பித்தது.

நெல்லை நகரின் பரபரப்பான சாலையில், தன் உயிரின் உயிரான கன்றுக்குட்டியை பிரிந்துவிடக்கூடாது என்ற தாய்மையின் பரிதவிப்புடன் அந்த பசு ஓடிய காட்சி, பார்த்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. தன் குட்டிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது, தன்னை விட்டு பிரிந்து போய்விடுமோ என்ற தாயின் உள்ளுணர்வு அந்த வாகனத்தின் பின்னால் விடாது துரத்தியது.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம், தாய் பாசத்தின் ஆழத்தையும், எல்லையற்ற அன்பையும் பறைசாற்றியது. மனிதர்களாகிய நாம் தாய்மையின் மகத்துவத்தை உணர்ந்தது போலவே, வாயில்லா ஜீவன்களுக்கும் அந்த உணர்வு எவ்வளவு வலிமையானது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. நெல்லை சந்திப்பில் நடந்த இந்த சம்பவத்தின் உருக்கமான காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.