Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘தொண்டை மண்டலத்தின்’ தலைநகரான காஞ்சிபுரம் மக்களவையை கைப்பற்ற போவது யார்? சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்

சென்னை: பட்டு துணிகளின் பாரம்பரியத்தை இன்றளவும் உலகிற்கு அடையாளப்படுத்தி வரும் காஞ்சிபுரம் மாவட்டம், ஆங்கிலேயர் காலத்தில் ‘காஞ்சீவரம்’ என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்தது. சுதந்திர இந்தியாவிற்கு முன்பு பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர பேரரசர்கள், முகலாய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த காஞ்சிபுரம் மாவட்டம், தொண்டை மண்டலத்தின் தலைநகரமாக திகழ்ந்தது. இத்தொகுதி, மக்களவைக்கான முதல் தேர்தலை 1951ம் ஆண்டு எதிர்கொண்டது.

இதில், காமன்வீல் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் டி.செங்கல்வராயனை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதனடிப்படையில், ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் தொகுதியாக இருந்து வந்த காஞ்சிபுரம் கடந்த 2008ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்கு பின் புதிய மக்களவை தொகுதியாக உருவாக்கப்பட்டது.

இங்கு கடந்த 2009ம் ஆண்டு முதல் மீண்டும் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 7 தனித்தொகுதிகளில் இந்த தொகுதியும் ஒன்றாகும். இதுதவிர, செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது, திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. தொகுதி மறுசீரமைப்பட்ட போது, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இணைக்கப்பட்டன.

செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், பாமக 2 முறையும், சுயேச்சைகள் 2 முறையும் வெற்றி பெற்றன. இந்த காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காமன்வீல் கட்சி (1951) ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. 2009ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒரு முறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொகுதியில் பொதுமக்கள் முக்கிய கோரிக்கையாக முன்வைப்பது, கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலை உள்ளிட்ட அனைத்து கைத்தறி துணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும், கைத்தறி தொழில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு சேலத்தில் உள்ளதை போன்று, இந்திய கைத்தறி தொழில்நுட்பம் நிறுவனம் ஒன்றிய அரசு சார்பில் உருவாக்கப்பட வேண்டும், தங்கம் விலை உயர்வால் ஜரிகை விலை உயர்வதால், கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.

அதேபோல், நெசவாளர்களுக்கு மீண்டும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்றி தர வேண்டும் என கூறுகின்றனர். தற்போதைய 17வது மக்களவை தொகுதியில் காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜசேகர், திமுக சார்பில் ஜி.செல்வம், பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன் ஆகியோர் களம் கண்டுள்ளனர். ஏற்கனவே, கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.செல்வம் இந்த முறை மீண்டும் காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் களம் காண்கிறார்.

இவர் இதுவரை நடந்த நாடாளுமன்ற விவாதங்களில் 18 முறை பங்கேற்று தன்னுடய வாதங்களை முன்வைத்துள்ளார். அதேபோல், மக்கள் நலன் சார்ந்த 436 கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார். மேலும், தனி நபர் தீர்மானத்தையும் கொண்டு வந்து, இந்த ஐந்து ஆண்டுகளில் 82 சதவீதம் வரை நாடாளுமன்றத்தில் தனது வருகையை பதிவு செய்துள்ளார்.

அதேபோல், காஞ்சிபுரத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த ரயில்வே பாலம் அமைக்கும் பணியை பல முறை ஆய்வு மேற்கொண்டு துரிதப்படுத்தியது இவரின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இவரை எதிர்த்து களம் காணும் அதிமுக வேட்பாளர் ராஜசேகர், பாமக ஜோதி வெங்கடேசன் ஆகியோர் வாக்காளர்களிடையே ஒன்றிய, மாநில ஆட்சியாளர்களின் சாதக பாதங்களை பிரசாரமாக மேற்கொண்டு வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர்.