Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேப்டனின் தவறான முடிவே தோல்விக்கு காரணம்... பயிற்சியாளர் கருத்தால் சர்ச்சை

மும்பை: ரஞ்சி அரையிறுதியில் மும்பை அணியிடம் தமிழ்நாடு தோற்றதற்கு கேப்டன் சாய் கிஷோரின் தவறான முடிவே காரணம் என்று பயிற்சியாளர் குல்கர்னி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மூன்றாவது நாளிலேயே தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது குறித்து சுலக்‌ஷன் குல்கர்னி கூறுகையில், ‘நான் எப்போதும் நேரடியாக பேசுவேன். முதல் நாள் ஆட்டம் காலை 9.30க்கு தொடங்கினாலும், நாங்கள் 9.00மணிக்கே தோற்றுவிட்டோம். ஆரம்பத்தில் நாங்கள் எதிர்பார்த்தபடியே எல்லாம் நடந்தது.

டாஸ் வென்றோம். ஆடுகளத்தை பார்த்த உடனேயே பயிற்சியாளனாக, மும்பைகாரனாக எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரிந்தது. நான் மட்டுமல்ல, அணியில் உள்ளவர்களும் பந்துவீச தயாராக இருந்தோம். காரணம்... காலிறுதியில் மும்பை அணியின் ஆட்டத்தை பார்த்த எங்களுக்கு, களத்தை பார்த்ததும் அதுதான் சரியாக இருக்கும் என்று தெரிந்தது. ஆட்டம் கடினமானதாக இருக்கும் என்றாலும் நாங்கள் சாதிப்போம் என்று நம்பினோம். ஆனால் கேப்டன் வேறு சிந்தனையில் இருந்தார். அவர்தான் முதலாளி. நான் ஆலோசனை மட்டும்தான் வழங்க முடியும். அவர் பேட்டிங்கை தேர்வு செய்ததும் தோற்கப் போகிறோம் என்று தெரிந்து விட்டது’ என்றார்.

மும்பையை சேர்ந்த முன்னாள் முதல்தர விக்கெட் கீப்பரான குல்கர்னி மும்பை, ரயில்வே, அசாம், விதர்பா அணிகளுக்காக விளையாடி உள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பயிற்சியாளராக 3 ஆண்டுகள் செயல்பட்டபோது 2 முறை அந்த அணியை அரையிறுதி வரை முன்னேற வைத்துள்ளார்.

தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் நடப்பு ரஞ்சி சீசனில் அதிக விக்கெட் வீசியவர்கள் பட்டியலில் 53 விக்கெட்களுடன் 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ஐதராபாத் வீரர் தனய் தியாகராஜன் (56 விக்கெட்) இருக்கிறார். லீக் சுற்றில் தமிழ்நாடு விளையாடிய 7 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே தோற்றது. காலிறுதியிலும் வென்று இருக்கிறது. பயிற்சியாளர் குல்கர்னி சொல்வது போல் இந்த 8 ஆட்டங்களிலும் டாஸ் முடிவை சாய் கிஷோர்தான் முடிவு செய்திருப்பார். அப்படி இருக்க... ஒரு ஆட்டத்தின் முடிவை வைத்து இளம் வீரரை பகிரங்கமாக, கடுமையாக விமர்சிப்பதும், முதலாளி என்று கொச்சைப்படுத்துவதும் ஒரு பயிற்சியாளருக்கு அழகா என்ற கேள்வி எழுந்துள்ளது.