சென்னை: சென்னை போர் நினைவு சின்னம் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில், கடந்த 2022 மார்ச் மாதம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோட்டை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்றதாக சாந்தி (68), அவரது கணவர் எலி என்ற பெருமாள் (70) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று கடந்த 2022ம் ஜூலை மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோயில் தெருவில் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்த போது கோட்டூரை சேர்ந்த அபிஷேக் (28) என்ற வாலிபரிடம் இருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த கஞ்சாவை ஆதம்பாக்கத்தை சேர்ந்த அஸ்வினிடம் இருந்து வாங்கி விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அபிஷேக், அஸ்வின் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி, காவல்துறையின் தரப்பில் கூறிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபடவில்லை. எனவே குற்றச்சாட்டு பலன்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தார்.